வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (12:02 IST)

10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற மூதாட்டி: உத்தரப் பிரதேசத்தில் மோசடி

பிரசவிக்கும் பெண்களுக்கு மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை உத்தரப் பிரதேசத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் 10 மாதத்தில் 5 முறை பெற்றுள்ளார்.
 
பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியில் உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரியாச் பகுதியில் வசிக்கும் 60 வயது மூதாட்டி ஒருவர் 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்றதாக கூறி ஆவணம் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு சொற்ப தொகையும், மிச்ச தொகையை மருத்துவமனை ஊழியர்களும் பரித்துச் சென்றுள்ளனர். 
 
இதே போல் அம்மாநிலத்தின் பதான் பகுதியில் வசிக்கும் ஆஷா தேவி என்ற பெண்மணி 4 மாதங்களில் 3 முறை பிரசவித்ததாக கூறி ஒவ்வொரு முறையும் தலா ரூ. 1,400 அரசிடம் இருந்து மோசடியாக பணம் பெறப்பட்டுள்ளது.
 
கடந்த பிப்ரவரி 28 முதல் முறையாக ஆஷாதேவி பிரசவித்ததாக கூறி பணம் பெற்றுள்ளதும், பின்னர் அவரே மார்ச் மாதத்தில் பிரசவித்ததாகவும், அதன் பின் மே 20 ஆம் தேதி மீண்டும் அவர் பிரசவித்ததாக கூறி பணம் பெறப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், 12 ஆண்டு காலமாக கர்ப்பமே தரிக்காத பெண் கர்ப்பமடைந்ததாகக் கூறி பணம் பெறப்பட்டுள்ளதும் தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்ரர் ஒன்றியத்துக்குட்பட்ட பராஹி கிராமத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி தேவி என்ற அப்பெண், கடந்த ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு பிரசவித்ததாக கூறி பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் கடந்த 12 வருடங்களாக அவர் குழந்தையே பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
 
இதையடுத்து இதற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாண்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மட்டும் இது போன்று 200 முறை மோசடியாக பணம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து அங்கு பணிபுரிந்த 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து விசாரிக்க அம்மாவட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.