வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (08:17 IST)

500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது: ஜெயலலிதாவிடம் கேட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வைத்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.


 
 
இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குளச்சல் துறைமுகம் குறித்து பேசியுள்ளார். குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார் மத்திய அமைச்சர்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த துறைமுகம் விவகாரத்தில் மிகப்பெரிய அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகம் அமைவதற்கு மீன்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு பக்கம் இருக்க. இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தடையாக இருக்கிறார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
மேலும் இந்த துறைமுகம் அமையாவிட்டால் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் இறங்கி போராடுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
 
இந்நிலையில் டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர், குளச்சல் துறைமுகத்துக்காக 500 ஏக்கருக்கு மேல் இடம் தேவைப்படுகிறது என்றும் மீனவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இடம் ஒதுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.