1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (05:07 IST)

கேரளாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 5 மாணவர்கள்-மாணவிகள் பலி

கேரளாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 5 மாணவர்கள்-மாணவிகள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் அருகே கோதமங்கலம் நெல்லிமுற்றம் பகுதியில் கற்கடம் வித்யா விகாஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
 
இப்பள்ளியில் மாலை வகுப்புகள் முடிந்தது மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
 
அப்போது, கொச்சி நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் திடீரென பயங்கர சத்தத்துடன் முறிந்து பேருந்து மீது விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த மாணவர்கள் வெளியே வரமுடியாமல் அழுது புழும்பி தவித்தனர்.
 
பஸ்சின் நடுப்பகுதியில் மரம் விழுந்ததால் பேருந்தில் இருந்த அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். அவ்வாறு மீட்டவர்களை கோளஞ்சேரி அரசு மருத்துவமவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜோகன் ஜெகி, கவுரி குன்னக்கல், இஷா சாரா எல்கோ, கிருஷ்ணேந்த்து, அமீர் ஜாகீர் ஆகிய 5 குழந்தைகள் பரிதாபமாக இறந்து போனார்கள்.
 
இதில் பள்ளிப் பேருந்து டிரைவர் உள்பட மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து, நேரில் சென்று விசாரணை நடத்திய, மாவட்ட கலெக்டர் ராஜ மாணிக்கம், மற்றும் கேரள அமைச்சர் அனூப் ஜேக்கப், விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களது மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றார்.
 
கேரளாவில் பள்ளி குழந்தைகள் 5 பேர் பலியான சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.