வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (15:09 IST)

இந்தியாவில் கடத்தப்படுபவர்களில் 40 சதவீதம் பெண்கள் - அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடத்திச் செல்லப்படுபவர்களில் 40 சதவிகிதம் பெண்கள் என்று தேசிய குற்றப்பதிவு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
இது குறித்து தேசிய குற்றப்பதிவு குழு வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஆண்டு மொத்தம் 77 ஆயிரம் பேர் கடத்தி செல்லப்பட்டனர். இதில் 31 ஆயிரம் பேர் பெண்கள். இவர்கள் திருமணத்துக்காக கடத்தி செல்லப்பட்டனர். கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 1500 பேர் கடத்தி செல்லப்பட்டனர்.
 
உத்தரப்பிரதேசம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 50 சதவிகித பெண்கள் கடத்தி செல்லப்பட்டனர். பெண்கள் கடத்தல் வழக்கில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் 7338 பெண்கள் கடத்தப்பட்டனர்.
 
பீகார் மாநிலத்தில் திருமணத்துக்காக 4641 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அசாம் மாநிலத்தில் 3883 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேற்குவங்கம் பணத்துக்காக கடத்தப்பட்டதில் முதலிடம் வகிக்கிறது.
 
இங்கு கடந்த ஆண்டு 101 பேர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் 83 பேரும், பீகாரில் 62 பேரும் பணத்துக்காக கடத்தப் பட்டனர். கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் அசாம் மாநிலம் முதலிடம் பிடிக்கிறது. அசாமில் கடந்த ஆண்டு 632 பேர் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 539 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு கடத்தப்பட்டவர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 12,361 பேர் கடத்தப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் 7833 பேரும், பீகாரில் 6570 பேரும், மேற்கு வங்கத்தில் 6110 பேரும் கடத்தப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.