வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:41 IST)

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள் மீது குற்றச்சாற்று பதிவு

2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாற்றுகளைப் பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றச்சாற்றப்பட்ட கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக, இந்த வழக்கில் அக்டோபர் 20 ஆம் தேதி குற்றங்கள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உத்தரவு தயார் நிலையில் இல்லாத காரணத்தால் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாற்றுகளை பதிவு செய்துள்ளது.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 2ஜி வழக்கில் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து ரூ.200 கோடி, கலைஞர் டி.வி.க்கு கைமாறியது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குநர் சரத் உள்ளிட்டோர் மீது இன்று குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.