வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 12 ஜூன் 2014 (11:07 IST)

நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்: முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிட்ட அதிகாரிகள் மீது வழக்கு

ஹிமாசலப்பிரதேசத்தின் பியாஸ் ஆற்றில் 24 மாணவ, மாணவியர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னறிவிப்பின்றி பர்தான் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
"முன்னறிவிப்பு கொடுக்காமல் பர்தான் அணையிலுள்ள லார்ஜி நீர்மின்சார தயாரிப்பு பகுதியிலிருந்து பியாஸ் நதியில் தண்ணீர் திறந்து விட்டு, இந்த விபத்தை ஏற்பட காரணமான அதிகாரிகளுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று மாண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்எஸ் நேகி தெரிவித்தார்.
 
இந்நிலையில், அந்த ஆற்றிலிருந்து ஷபீர் ஹுûஸன் ஷேக் என்ற மேலும் ஒரு மாணவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. ஹனோஜி என்ற பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
 
முன்னதாக 4 மாணவர்களின் உடல்கள் திங்கள்கிழமையும், ஒரு மாணவரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
 
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில், மீதமுள்ள 18 மாணவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
"மாணவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட தலோத் பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிற்கு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் பாறைகளும், மண் திட்டுகளும் அதிக அளவில் உள்ளதால், அதில் மாணவர்களின் உடல்கள் சிக்கி இருக்கலாம். ஆற்றிலுள்ள தண்ணீர் மங்கலாக உள்ளதால் தேடும் பணி கடினமாக உள்ளது' என்று தேசிய பேரிடர் மீட்பு பணிக்குழு உயரதிகாரி ஜெய்தீப் சிங் தெரிவித்தார்.
 
மாணவர்களின் உடலை தேடும் பணியில் 84 தேசிய பேரிடர் மீட்புப்பணிக் குழு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.