வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:35 IST)

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை - ஜி.கே.வாசன்

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறுகளை சுட்டி காட்டவும், தட்டிக் கேட்கவும், கண்டிக்கவும் நாட்டில் எதிர்கட்சி வேண்டும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் பாஜக தங்களின் செயல்களைத் தட்டிக் கேட்க எதிர்கட்சி இருக்கக் கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதனை ஒருபோதும் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்திய மீனவர்களின் 63 படகுகளை இலங்கை ராணுவம், சிறைபிடித்து நீண்ட நாள்கள் ஆகியும் விடுவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் படகுகளை ஒப்படைக்க முடியாது என கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

மீனவர் பிரச்னை தொடர்பாக ஆகஸ்ட்டு 29 ஆம் தேதி புது டெல்லியில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர சுமூகத் தீர்வு காண வேண்டும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதில் காங்கிரஸுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டினை காங்கிரஸ் பேணி பாதுகாத்து வருகிறது. ஆனால் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த ஆதரவை மதவாத கொள்கைகளுக்குக் கிடைத்த ஆதரவாக பாஜக எண்ணி விடக்கூடாது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் பலமான இயக்கமாக உருவாகும். பாஜகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

அவர்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் அளிக்காத அரசாக இருக்கிறது. விலைவாசி தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

நான் தனிக்கட்சி தொடங்குவதாக வரும் செய்திகள் தவறானவை. தவறான செய்திகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. பிரியங்காவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக சோனியா காந்திதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது உள்ளாட்சிகளில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்“ என்று ஜி.கே.வாசன் கூறினார்.