1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (08:08 IST)

பிப்ரவரி 1 முதல் 10 % இட ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு !

பொருளாதார ரீதியான் 10 % இட ஒதுக்கீட்டினை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாதி ரீதியாக இல்லாமல் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடித் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதற்குக் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி போன்ற தேசியக் கட்சிகளிடம் ஆதரவுக் கிடைத்துள்ளது. ஆனால் மாநிலக் கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

திமுக மற்றும் அதிமுக எம்.பி.கள் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். ஆனால் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கூறி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் ‘தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள், கல்வி மற்றும் சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெறாத, ஆண்டுக்கு ரூபாய்.8 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் உடைய, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மக்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை ஏற்கனவே குஜராத் மாநிலம் அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்கத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.