கனிமொழி கைதால் திமுக-காங். உறவில் பாதிப்பில்லை: குலாம்நபி ஆஸாத்

புதுடெல்லி| Webdunia|
கனிமொழி கைதால் திமுக - காங்கிரஸ் கட்சி இடையேயான உறவில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது மகள் கனிமொழியை சந்தித்துப் பேசுவதற்காக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நேற்று காலை டெல்லி வந்தார்.

அதனைத் தொடர்ந்து மாலையில் திகார் சிறையில் கனிமொழி, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் குலாம் நபி ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸாத், கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.எனினும் சட்ட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது என அவர் கூறினார்.
தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது.

2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதையும், இதில் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதி புரிந்துகொண்டுள்ளார்.அது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே என்று ஆஸாத் மேலும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :