வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. எம். முருகன்
Written By எம். முருகன்
Last Updated : திங்கள், 4 ஜூலை 2016 (16:39 IST)

சுவாதி கொலை வழக்கில் எழும்பும் சந்தேகங்கள் : விடை கிடைக்குமா?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 

 
சுவாதியை ராம்குமார் ஒருதலையாய் காதலித்துள்ளார் என்றும், அவரின் காதலை ஏற்காததால் இந்த கொலையை செய்துள்ளார் என்றும் அவர் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கழுத்து அறுபட்டு, பாளையங்கோட்டை மருத்துவமனையில் இருந்து இன்று அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமாரிடம், எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் விசாரணை நடத்தினார். அதன்பின் ராம்குமாரை 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த கொலை வழக்கில், பொதுமக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
1. சுவாதிக்காகவே சென்னை வந்த ராம்குமார், அவரின் வீட்டின் அருகில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார். பேஸ்புக் மூலமாகவே சுவாதி, ராம்குமாருக்கு அறிமுகமானார் என்று கூறப்படுகிறது. ஆனால், சென்னை சூளைமேட்டில் தான் வசிக்கும் வீட்டு முகவரி கொண்டு சுவாதி, ராம்குமாரிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாக பழகினாரா?
 
2. தன்னை யாரோ ஒருவன் நெடுநாட்களாக பின் தொடர்ந்து வருவதாக சுவாதி தனது தோழி மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால், ராம்குமாரோ, சுவாதி என்னிடம் பழகினார், ஆனால் என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே பழக்கமான ராம்குமாரை, யார் என்றே தெரியவில்லை என்று சுவாதி எப்படி கூறினார்?
 
3. அப்படி ராம்குமார் பின்னால் வந்து தொல்லை கொடுத்தது பற்றி, தனது பெற்றோரிடம் சுவாதி தெரிவித்தாரா? அப்படியெனில் ராம்குமார் பற்றி ஏன் போலீசாரிடம் புகார் கொடுக்கவில்லை?
 
4. சில தினங்களுக்கு முன்பு சுவாதியை ஒரு வாலிபர் கன்னத்தில் அடித்ததை தான் பார்த்தேன் என்றும், அது கண்டிப்பாக ராம்குமார் இல்லை என்றும், இதை எங்கு வந்து வேண்டுமானாலும் கூற தயார் என்று தமிழரசன் என்பவர் கூறியுள்ளார். அப்படியெனில், சுவாதியை கன்னத்தில் அறைந்தவன் யார்?. அதற்கு ஏன் சுவாதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளாரா? இதை ஏன் காவல்துறை மறைக்கப் பார்க்கிறது?
 
5. உணர்ச்சி வேகத்தில் நடந்த கொலை என்றால், சுவாதியின் செல்போனை ராம்குமார் ஏன் எடுத்துச் சென்றார்? அதில் என்ன தகவல்கள் இருக்கிறது?
 
5. சுவாதியைக் கொன்று விட்டு, ரத்தக்கறை படிந்த சட்டையுடன், சாதரணமாக தான் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்ற ராம்குமாரை சாலையில் சென்ற ஒருவர் கூடவா பார்க்கவில்லை?
 
6.  ராம்குமார் ஊருக்கு சென்ற பிறகு, அவர் அறையில் விட்டுச் சென்ற ரத்தக்கறை படிந்த சட்டையை, அவருடன் தங்கியிருந்த ஒருவர் பார்த்து, அதன்பின் தான் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ராம்குமார் ஏன் அந்த சட்டையை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை?. ஒருவேளை அவரின் சொந்த ஊரில், அவரின் வீட்டில்தான் அந்த சட்டை இருந்தது எனில், ஒரு வாரமாக ராம்குமார் அந்த சட்டையை துவைக்காமல் வைத்திருந்தாரா?
 
7. இந்த  கொலையில் வேறு யாராவது சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கேள்வி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது கமிஷனரிடம் கேட்கப்பட்டது. பொதுவாக, விசாரணையில் அது தெரியவரும் என்றுதான் போலீசார் கூறுவார்கள். ஆனால், அப்படி யாரும் இல்லை. ராம்குமார்தான் குற்றவாளி என்று கமிஷனர் கூற காரணம் என்ன?
 
8. போலீசார், விசாரணை என்ற பேரில் தங்களுக்கு தொல்லை தருவதாக முதல்வரிடம் புகார் செய்ய, சுவாதியின் பெற்றோர்கள் முனைப்பு காட்டியது ஏன்?. சுவாதியின் நடத்தை பற்றி யாரும் தவறாக கேள்வி எழுப்பக்கூடாது என்று நினைக்க, உடனடியாக சுவாதியின் தந்தையை தூண்டியது எது?
 
9. பிலால் மாலிக் என்ற வாலிபரால் சுவாதி கொலை செய்யப்பட்டார் என்ற வதந்தி முதலில் பரவியது. உண்மையிலேயே, சுவாதிக்கு அந்த பெயரில் ஒரு நெருங்கிய நண்பர் இருந்துள்ளார். வதந்தி கிளப்பியவர்களுக்கு அவரின் பெயர் எப்படி தெரிந்தது?
 
10. ஏற்கனவே பரனூரில் சுவாதி பணியாற்றிய போது, நொளம்பூரைச் சேர்ந்த ஒரு வாலிபரிடம் இரவு நேரங்களில் மணிக்கணக்கில், தனது செல்போனில் பேசியுள்ளார் என்றும் அவரிடம் போலீசார் விசாரணையும் நடத்தினார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் விவரங்கள் என்ன?
 
11. சுவாதிக்கு நெருக்கமாக பல ஆண் நண்பர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன?. ராம்குமாரோடு மட்டும் இந்த வழக்கை முடித்து கொள்ள போலீசார்  முனைப்பு காட்டுவதற்கு ஏதாவது நிர்பந்தம் உள்ளதா?
 
12. வேறு யாராவது ஒருவருக்காக, ராம்குமார் கூலிப்படை போல் செயல்பட்டரா என்ற  கோணத்தில் விசாரணை செய்ய போலீசார் ஏன் முனைப்பு காட்டவில்லை?
 
13. கைது முயற்சியின் போது, ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்பட்டது. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமிஷனர், கத்தியால் ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டார் என்று கூறியுள்ளது முரண்பாடாக இருக்கிறதே?
 
இது அனைத்தும் செய்திகளில் வெளியான தகவல்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அடிப்படை சந்தேகங்கள்தான். மேலும், சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்படும் கேள்விகள்தான். சுவாதியின் நடத்தை பற்றி தவறாகவோ அல்லது போலீசாரை குறை கூறுவதோ நோக்கமில்லை. 

ஒருவார காலமாக, கொலையாளியை பிடிக்க, இரவு பகல் பாராமல்  அவர்கள் கொடுத்த உழைப்பும், பட்ட கஷ்டங்களும் பொதுமக்கள் யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. 
 
சுவாதி மற்றவர்களிடம் பழகுவதுபோல், ராம்குமாரிடம் பழகியிருக்கலாம். அதை ராம்குமார் தவறாக நினைத்திருக்கலாம். தன்னுடைய தோற்றம், பொருளாதாரம், அந்தஸ்து பற்றி சுவாதி இழிவாக பேசியதால் கொலை செய்தேன் என்று ராம்குமார் கூறியிருப்பது உண்மையாக இருக்கலாம். 
 
ஆனால், சுவாதியின் நடத்தை பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் வாயை அடைப்பதற்காகவாவது போலீசார் இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடையளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.