1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை; புதிய தகவல்கள்

என்.எல்.சி. சுரங்கத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு ஒப்பந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து மற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
FILE

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் ஐ.டி.ஐ. நகரை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜ்குமார்(வயது35). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில், ராஜா 2-வது சுரங்கத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.

அப்போது 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், ராஜ்குமாரை சுரங்கத்துக்குள் செல்ல அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி ராஜ்குமார் தனது செல்போன் மூலம் நண்பரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ராஜ்குமாரை நோக்கி துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டார். இதில் ராஜ்குமாரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், அவர் மூளை சிதறி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
FILE

இந்தநிலையில் 2-வது ஷிப்டு பணிக்கு வந்த தொழிலாளர்கள், ராஜ்குமார் மூளை சிதறி இறந்து கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சம்பவம் பற்றி மற்ற தொழிலாளர்களுக்கும், ராஜ்குமாரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு தொழிலாளர்களும், ராஜ்குமாரின் உறவினர்களும் திரண்டு வந்தனர்.

அப்போது ராஜ்குமாரின் நண்பர்கள் ஆவேசத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரை நோக்கி கற்களை வீசினார்கள். இதனால் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் பதிலடியாக தொழிலாளர்களை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள்.
FILE

நிலைமை விபரீதமாகவே மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், அங்கு திரண்டு நின்ற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினார்கள். 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்து வடலூர்-விருத்தாசலம் சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தொழிலாளர்களை விரட்டியடித்தனர். இதனால் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பணிக்கு வந்த தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அடித்து நொறுக்கினர். இதில் சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. அதேபோல் பணி முடிந்து சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்களையும், இந்த சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தாக்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் 2-வது சுரங்கத்தின் முன்புள்ள கடலூர்-விருத்தாசலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ராதிகா தலைமையில் அதிரடிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், கடலூர் உதவி ஆட்சியர் ஷர்மிளா ஆகியோரும் அங்கு வந்தனர்.
FILE

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி ஆட்சியர் ஷர்மிளா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொழிலாளர்களை அழைத்தார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களும், ராஜ்குமாரின் உறவினர்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 2-வது சுரங்க அலுவலக வளாகத்துக்கு வந்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி.தலைவர் வரவேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவரது வருகைக்காக தொழிலாளர்கள் காத்து இருந்தனர்.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ராஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு காவல்துறையினர் முயற்சித்தனர். ஆனால் ராஜ்குமாரின் உறவினர்களும், நண்பர்களும், பிணத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, பிணத்தை சுற்றி அமர்ந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ராதிகா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என்.எல்.சி.யில் பணியாற்றி வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை வெளியேற்றினால்தான் உடலை எடுக்க அனுமதிப்போம் என்று தொழிலாளர்கள் கோரினார்கள். இந்த கோரிக்கையை காவல் கண்காணிப்பாளர் ராதிகா ஏற்கவில்லை.
FILE

இதனால் தொழிலாளர்களும், ராஜ்குமாரின் உறவினர்களும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சம்பவ இடத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ராஜ்குமாரின் உடலை எடுத்துச்செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று உள்ளே வந்து கொண்டு இருந்தது. தொழிலாளர்கள், அந்த ஆம்புலன்சை உள்ளே வரவிடாமல் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து அங்கே நின்ற அதிரடிப்படை காவலர்கள் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். ராஜ்குமாரின் உடலை சுற்றி இருந்த உறவினர்கள் உள்பட அனைவரையும் விரட்டியடித்தனர், இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

சற்று தூரம் சென்றதும் தொழிலாளர்களும், ராஜ்குமாரின் உறவினர்களும் போலீசாரின் மீது கற்களை வீசினார்கள். இதனால் காவலர்கள் பின்வாங்கினார்கள். அப்போது சுரங்க நுழைவுவாயிலில் நின்று கொண்டு இருந்த காவல் கண்காணிப்பாளர் ராதிகா, மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், உதவி ஆட்சியர் ஷர்மிளா ஆகியோர் தங்கள் மீது கற்கள் படாமல் இருப்பதற்காக சுரங்க அலுவலகத்துக்குள் சென்றனர்.

இதற்கிடையே காவல்துறையினரும், தொழிலாளர்கள் மீது கற்களையெடுத்து வீசினார்கள். இருபுறமும் கற்கள் பறந்து விழுந்து கொண்டே இருந்தன. இந்த களேபரத்துக்கு இடையே சுரங்க வளாகத்தில் நின்று கொண்டு இருந்த ஆம்புலன்சில் ராஜ்குமாரின் உடலை ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் கல்வீச்சு முடிந்த சில நிமிடங்களுக்குப்பிறகு தொழிலாளர்களும், ராஜ்குமாரின் உறவினர்களும் மீண்டும் 2-வது சுரங்க நுழைவு வாயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினார்கள்.

ஆனாலும் தொழிலாளர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் தொழிலாளர்கள் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தால் நெய்வேலியில் பதற்றம் நிலவுகிறது.