வீரசிவாஜி - திரை விமர்சனம்

Sasikala| Last Updated: சனி, 17 டிசம்பர் 2016 (17:00 IST)
கணேஷ் விநாயக்கின் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், யோகி பாபு, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் வீரசிவாஜி.பொதுமக்களிடம் பண மோசடி செய்து பிரபலமாகத் துடிக்கும் வில்லனிடம் ஏமாறும் ஹீரோ, அதே ஸ்டைலில் வில்லனின் மோசடிப்பணம் மொத்தத்தையும் கைப்பற்றி ஏமாந்தவர்களுக்கு திருப்பி அளித்து தன் உறவுகளின் மருத்துவத்தேவை மற்றும் தனது தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டாரா? என்பதுதான் கதை.
 
பாண்டிச்சேரியில் கால் டாக்ஸி ட்ரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. அவர் அனாதையாக இருந்தாலும் சொந்த அக்கா போல் பாத்துக்கொள்கிறார் வினோதினி. வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ரூ 25 லட்சம் தேவைப்படுகின்றது. கால் டாக்ஸி விற்று ரூ 5 லட்சம் ஏற்பாடு செய்கிறார், அந்த நேரத்தில் தான் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கின்றது. அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி செல்கிறார். அதன் பிறகு அந்த கும்பலை கண்டுப்பிடித்தாரா, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை.
 
விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக வந்தாலும் கலர்புல்லாக தான் இருக்கிறார், ஆக்ஷனில் அதிரடி காட்டினாலும் இன்னும் ரொமான்ஸில் கஷ்டப்படுகின்றார். அமைதியாக நடிக்க சொன்னால் செம்ம ஸ்கோர் செய்துவிடுகிறார். ஷாம்லி நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கின்றார். பேபி ஷாம்லி தற்போது ஹீரோயின் ஷாம்லி, ஆனால், இவர் நடிப்பதற்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. அதிலும் டப்பிங் வாய்ஸ் எங்கும் எடுபடவில்லை. வழக்கமான ஹீரோயின் போல் காதல், டூயட் மட்டுமே தந்திருக்கிறார்கள்.
 
படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியில் ரமேஷ், சுரேஷ் என காமெடியில் கலக்கியுள்ளனர். காமெடி எனும் பெயரில் ரோபோ சங்கரும், யோகி பாபுவும் பண்ணும் அலப்பறை தாங்கமுடியல. மேலும் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் எல்லாம் வழக்கமான நடிப்பு தான். படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலே சென்றாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படம் செம்ம சூடு பிடிக்கின்றது.
 
இமான் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், ஏதோ ஒரு நெருடல். எங்கோ கேட்டது போலவே ஒரு பீலிங். அதைவிட பின்னணி இசை படத்தில் காட்சி வருவதற்கு முன்பே இசை வந்து காதை பதம் பார்த்து செல்கிறது. இயக்குனர் கணேஷ் விநாயக் கூட்டணியில் வீரசிவாஜி படத்தின் மூலம் களம் இறங்கியுள்ள விக்ரம் பிரபு சறுக்கலில் இருந்து மீள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
மொத்தத்தில் வீரசிவாஜி வீரம் போதாது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :