வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2015 (15:40 IST)

வேதாளம் - விமர்சனம்

அஜித்தின் 56 -வது படமான வேதாளம் அமர்க்களமாக வெளியாகியிருக்கிறது. திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் திணறுகின்றன.


 
 
இத்தாலியில் தொடங்குகிறது படம். மிகப்பெரிய டான் ராகுல் தேவ். அவரைப் பிடிக்க முயற்சி செய்யும் ராணுவ அதிகாரியை ராகுல் தேவ் கொலை செய்கிறார். அப்போது, தமிழ் சினிமா பேசத் தொடங்கியது முதல், படங்களில் இடம்பெற்று வரும் வசனத்தை அந்த அதிகாரி உதிர்க்கிறார்.
 
"உன்னைக் கொல்ல ஒருவன் வருவாண்டா."
 
இதற்கு அடுத்தக் காட்சி எது என்று குழந்தைகளுக்கே தெரியும். கொல்கத்தாவில் அஜித்தின் அறிமுகம். தங்கை லட்சுமி மேனனின் படிப்புக்காக கொல்கத்தா வரும் அஜித் ரொம்பவும் அப்பாவி, பரம சாது. ஒரு கிரிமினலை அவர் போலீஸில் காட்டிக் கொடுக்க, அஜித்தை அவனது ஆள்கள் கடத்துகிறார்கள். நீங்க என்னை கடத்தலைடா, நானாகத்தான் வந்தேன் என்று அவனை போட்டுத்தள்ளுகிறார். அந்த கிரிமினல் யார் என்றால், ராகுல் தேவின் தம்பி.
 
பரம சாதுவான டாக்ஸி டிரைவர் அஜித்தின் பின்னணி என்ன? லட்சுமி மேனன் அவரது தங்கைதானா? அஜித் ஒரு கொலைகாரர் என்பது ஏன்? இப்படி பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, படத்தின் இரண்டாவது பகுதி.
 
சாது, சண்டைக்காரன் என்று இருவிதமான பாவங்களை காண்பிக்க அஜித்துக்கு வாய்ப்பு. ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் தெறிக்கவிடலாமா முகபாவத்துக்கு கைத்தட்டி ஓய்கிறது ரசிகக் கூட்டம். நீ கெட்டவன்னா நான் கேடு கெட்டவன் போன்ற வசனங்கள் இன்னொரு பலம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

ஸ்ருதி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாக வந்து போகிறார். கதையின் ட்விஸ்டுக்கு இவர் பயன்பட்டாலும், திரைக்கதையில் ஸ்ருதிக்கு மணக்கிற கறிவேப்பிலையின் இடம்தான். எங்கோ இருக்கும் இவர் அஜித் கொலை செய்வதை கிட்டத்தில் பார்ப்பதாக காதில் பூ சுற்றியிருக்கிறார்கள்.


 
 
லட்சுமி மேனனுக்கு தங்கை வேடம். ஸ்ருதியைவிட இவருக்குதான் நடிக்க அதிக வாய்ப்பு. அசால்டாக ஊதித் தள்ளியிருக்கிறார். லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையில்லை என்பது திரைக்கதையின் அழகான முடிச்சு. அதை போட்டவிதமும், அவிழ்த்த முறையும்தான் சரியில்லை. தம்பி ராமையா எப்போதும் போல் கொடுத்த வேலையை கொஞ்சம் கூடுதலாகவே செய்துள்ளார்.
 
அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்கையில் திரைக்கதையில் எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்? தம்பியை கொன்றது யார் என்று ராகுல் தேவ் ஆள், படை, அம்பு சகிதம் நவீன தொழில்நுட்பத்துடன் அஜித்தை தேட, அவரோ எந்த கஷ்டமும் இல்லாமல் ராகுல் தேவை பழிவாங்கிவிட்டுப் போகிறார். பில்டப்புக்கு ஏற்ற பின்னணி வேண்டாமா? இதேபோல் சவசவ காட்சிகளால் வேதாளத்தை நிறைத்திருக்கிறார் சிவா. பின்னணி இசையும், பாடல்களும் பரவாயில்லை.
 
சரத்குமார், நமிதா நடிப்பில் வெளிவந்த ஏய் படத்தின் கதையை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அதில் சரத், வடிவேலு காம்பினேஷனில் காமெடிக் காட்சிகள் பட்டையை கிளப்பும். இதில் சூரியின் சூரமொக்கை தாங்கவில்லை. படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது சூரியின் காட்சிகள்.
 
காலாவதியான கதையில் விதவிதமான சண்டைக் காட்சிகளை தூவி வேதாளமாக்க முயன்றிருக்கிறார் சிவா. எடிட்டர் ரூபனும், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவும் படத்துக்கு கை கொடுத்திருக்கிறார்கள். அஜித்தின் மாஸ் மட்டும் இல்லையென்றால் முதல் காட்சியிலேயே படம் பீஸ் பீஸாகியிருக்கும்.
 
வேதாளம்... தப்புத்தாளம்.