1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2016 (14:28 IST)

தொடரி - திரைவிமர்சனம்

தொடரி - திரைவிமர்சனம்

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயிலில் வேலை செய்கிறவராக வருகிறார் தனுஷ். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார்.


 


கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.
 
இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார். 
 
தனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது. ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.
 
இப்படி விறுவிறுப்பாக சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா? தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என கமெடி பட்டாளம் இருந்தாலும் காமெடி சுமாராகவே உள்ளது.
 
ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தனுஷ் அதிகமான சவால் எதுவும் இல்லாத வேடத்திலும் பக்குவமான நடிப்பைத் தந்திருக்கிறார். 
 
இயற்கை காட்சிகளை பிரபு சாலமன் அழகாக படமாக்கியிருக்கிறார். அதேபோல் வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா இயற்கை அழகை அழகாக படம் பிடித்திருக்கிறது. டி. இமான் இசையில் பாடல்கள் சூப்பர் என்று சொல்லுமளவுக்கு இல்லை என்றாலும் கேட்கும்படியாக உள்ளது.
 
மொத்தத்தில் தொடரியின் வேகம் போதாது. பொறுத்திருந்து பார்ப்போம்.