வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2016 (16:36 IST)

தெறி - விமர்சனம்

தமிழகமெங்கும் தெறி வெளியாகியிருக்கிறது என்றாலும், சென்னைக்கு வெளியே தெறி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பல திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுடனான பிரச்சனை தீர்ந்தது என்று சொன்னாலும், அது இன்னும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.


 
 
படம் வெளியான திரையரங்குகளில் திருவிழா கூட்டம். அதிக எதிர்பார்ப்பு. அனைத்தையும் படம் நிறைவு செய்ததா?
 
கேரளாவில் மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகிறார், விஜய். நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரி செல்லும் படத்தில் விஜய் எப்போது, நான் அவனில்லை என்று ஆக்ரோஷ முகம் காட்டுவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
 
எமி ஜாக்சன் ஒரு சின்ன பிரச்சனைக்காக காவல்நிலையம் செல்ல, விஜய்யின் நிஜப்பெயர் ஜோசப் குருவில்லா இல்லை என்பது தெரிய வருகிறது. அப்படியானால் விஜய் யார்? அவரது பின்னணி என்ன?
 
எமி ஜாக்சனைப் போல் நமக்கும் ஆர்வம். ஜெட் வேகத்தில் எழும்ப வேண்டிய படம் இந்த இடத்தில் அரதபழசான கதையாலும், திரைக்கதையாலும் பட்டம் மாதிரி அல்லாடுகிறது.
 
விஜய்க்கு சாதுவாகவும், ஆக்ரோஷமாகவும் பல முகங்கள் காட்ட வேண்டிய கதாபாத்திரம். வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று ஜோசப் குருவிலாவாக அவர் காட்டும் மேனரிசங்கள் படு செயற்கை. போதததற்கு எமி ஜாக்சனின் இரண்டும் கெட்டான் மலையாளம். இந்த இடங்களில் நம்மை காப்பாற்றுவது துறுதுறுவென வரும் நைனிகாவும் அவரது நடிப்பும். இந்தப் படத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். விஜய்யின் மனைவியாக வரும் சமந்தாவின் நடிப்பு தரம். ஆனால், இவர்கள் அனைவரையும்விட மொட்ட ராஜேந்திரன் ஸ்கோர் செய்கிறார். இடைவேளையில் விஜய்யும் ராஜேந்திரனும் பேசிக் கொள்ளும் காட்சி அப்ளாஸ் வாங்குகிறது.
 
பாடல்களை படமாக்கா சிறப்பாக மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டு டூயட் பாடல்கள் படத்தின் வேகத்துக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை. மகனை கொன்ற விஜய்யை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரம் இயக்குனர் மகேந்திரனுக்கு. ஒரேவிதமாக பார்த்து பழகிய வில்லன்களுக்கு இவர் வித்தியாசமாக தெரிகிறார். மத்தபடி பத்தோடு பதினொன்று.
 
வில்லனின் மகன் ஒரு பெண்ணை கற்பழிப்பதும், அவனை ஹீரோ அடித்துக் கொல்வதும், பதிலுக்கு வில்லன் ஹீரோவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதும்... ஸ்ஸ்ஸ்... சொல்லும் போதே போரடிக்கிறது. இந்த புராதன கதைதான் அட்லிக்கு கிடைத்ததா?
 
ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் சேர்ந்து இந்த பழைய கதையை மெருகேற்ற பாடுபட்டிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விஜய்யின் ஆக்ரோஷம் தெறிக்கிறது (அப்பாடி... டைட்டிலை கொண்டு வந்திட்டோம்). ஆனால், கதைக்கு சம்பந்தமில்லாமல், பிச்சையெடுக்க வைக்கும் குழந்தைகள் விஷயத்தில் விஜய் போடும் சண்டை ஒட்டாமலே உள்ளது. 
 
எவ்வளவுதான் பழைய கதையாக இருந்தாலும், அதனை சுவாரஸியமாக சொல்லியிருந்தால் மனதை தொட்டிருக்கும். தெறியில் அங்கே இங்கே அலைபாய்ந்து பாதி படத்துக்குப் பிறகுதான் கதைக்கே வருகிறார்கள். சில சென்டிமெண்ட் காட்சிகளும் தொலைக்காட்சி சீரியலை நினைப்படுத்த, தெறித்து வெளியே வருகிறோம்.
 
தெறி - ஹார்ட்கோர் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்.