1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Geetha Priya
Last Updated : சனி, 6 செப்டம்பர் 2014 (14:55 IST)

The Prince - விமர்சனம்

ஜேஸன் பேட்ரிக், புரூஸ் வில்லிஸ், ஜான் குஸாக்... எல்லாம் பெரிய பெரிய பெயர்கள். யாரும் ஒருகணம் சபலப்பட்டுவிடுவார்கள். செப்டம்பர் 12 த பிரின்ஸ் படம் இந்தியாவில் வெளியாகும் போது, பலரும் சபலப்பட்டு டிக்கெட் வாங்கலாம். அந்த அனுபவம் எப்படி இருக்கப் போகிறது?
ஹாலிவுட்டில் தயாராகும் அடிமட்ட மசாலாக்களும் குறைந்தபட்ச லாஜிக்குடன் இருக்கும் என்பது இணைய விமர்சகர்களின் கருத்து. அதனை அடித்து நொறுக்கவென்றே ஹாலிவுட்டில் அவ்வப்போது சில படங்கள் தயாராகும். த எக்ஸ்பென்டபிள்ஸ் சீரிஸ் போல. அதில் ஒன்றுதான் இந்த, த பிரின்ஸ் திரைப்படம்.
 
மிசிசிபியின் ஒதுக்குப்புறமான இடத்தில் கரேஜ் நடத்திவருகிறவர் ஜேஸன் பேட்ரிக். வேறொரு நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் போனில் பேசுகிறார். மகளின் முகம் வெளிறிப் போய் உள்ளது. குழப்பமாக பேசுகிறாள். அப்போதே, அவளுக்கு ஏதோ நடக்கப் போகிறது, ஜேஸன் பேட்ரிக் அவளை மீட்கச் செல்வார், என்பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது... பாட்ஷா என்று தலைவரைப் போல் டயலாக் விடுவார் என்பதெல்லாம் தெரிந்துவிடுகிறது. ஹாலிவுட், டேக்கன் ஹேங்ஓவரிலிருந்து இன்னும் மீளவில்லை. 
 

அடுத்தமுறை போன் பேசுகையில் மகளுக்குப் பதில் ஒரு தடியன் போனில் பேசுகிறான். ஜேஸன் வண்டியேறுகிறார். மகளின் அறை பூட்டிக் கிடக்கிறது. அவள் தனது தோழியுடன் இரவு விடுதி ஒன்றின் முன்னால் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அந்த விடுதிக்கு சென்று மகளை குறித்து விசாரிக்கிறார். தோழியை கண்டு பிடித்து மகளின் இருப்பிடத்தை அறிய முயல்கிறார். மகள் இருப்பது நியூ ஆர்லியன்ஸ் என்பதை அறிந்து அங்கு செல்கிறார்.
முதல் காட்சியிலிருந்து அடுத்து வருகிற அனைத்துக் காட்சிகளையும் யூகிக்க முடிவது இந்தப் படத்தின் பெரிய பலவீனம். புரூஸ் வில்லிஸ்தான் வில்லன். ஜேஸன் பேட்ரிக்கின் பழைய பகையாளி. அவரது அறிமுகம் இருக்கிறதே... ஜெய்சங்கர் படம் தோற்றது. ஹீரோவின் நண்பராக ஜான் குஸாக்குக்கு ஒரு கொசு வேடம். பிரபல ராப்பர் 50 சென்டுக்கு கொசு முட்டையைவிட சிறியது. ரஜினியின் டயலாக்கை சும்மா சொல்லவில்லை. மிசிசிபி கார் மெக்கானிக்குக்கு நியூ ஆர்லியன்ஸில் உள்ள பழைய பட்டப் பெயர்தான் பிரின்ஸ். அவர் நியூ ஆர்லியன்ஸின் முன்னாள் தாதா.
 
படத்தை Brian A Miller  இயக்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரைவிட வேகமானவராக இருப்பார் போலிருக்கிறது. இவரது முந்தையப் படம், த அவுட்சைடர் இந்த வருடம் மார்ச்சில்தான் யுஎஸ்ஸில் வெளியானது. ஆறு மாதத்திற்குள் அடுத்தப் படம். படமும் பாஸ்ட்ஃபுட் போலதான் உள்ளது. துருப்புச்சீட்டான ஜேஸனின் மகள் புரூஸ் வில்லிஸின் கஸ்டடியில் இருக்கிறாள். அவளை காப்பாற்ற வரும் ஜேஸன், வில்லிஸின் ஆட்களை குருவி சுடுகிற மாதிரி சுட்டுக் கொண்டேயிருக்க, கஸ்டடியில் இருக்கும் அவரது மகளை சுட்டுவிடுவேன் என்று கடைசிவரை சொல்லிக் கொண்டேயிருக்கிறார் வில்லிஸ். ஐம்பது பேரை கொன்று, ஒரு மார்ஷியல் பைட்டும் முடித்து சாவகாசமாக வில்லிஸை ஜேஸன் சுட்டுக் கொல்லும்வரை... வில்லிஸ் அதே டயலாக்கை, மகளை போட்டுத்தள்ளிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் இப்படியொரு மாக்கான் வில்லனை பார்த்திருக்க முடியாது. இப்படியொரு அவப்பெயருக்கு, டாலர் கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை என்று, த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 படத்திலேயே புரூஸ் வில்லிஸ் நடித்திருக்கலாம்.
 
இதற்கு மேலும் மன தைரியம் உள்ளவர்கள், ஜேஸன் பேட்ரிக்கின் மிடுக்கான நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.