வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2016 (12:57 IST)

சேதுபதி - விமர்சனம்

சேதுபதி - விமர்சனம்

விஜய் சேதுபதி முதல்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கும் படம். முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம் என்று கஞ்சி போட்ட மொறமொறப்பில் படத்தின் பெயராக மட்டுமின்றி உயிராகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி.
 

 
கடமை தவறாத இன்ஸ்பெக்டர் சேதுபதி. அவரது எல்லைக்குள்பட்ட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். விசாரிக்கும் பொறுப்பு விஜய் சேதுபதியிடம் தரப்படுகிறது. 
 
அந்த பகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டப்பஞ்சாயத்து வாத்தியார்தான் (வேல ராமமூர்த்தி) இந்தக் கொலைக்கு காரணம் என்பது தெரிய வருகிறது. தனது மருமகனான சப் இன்ஸ்பெக்டரை கொல்ல வாத்தியார் திட்டமிட்டதும், தவறுதலாக இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் பலியானதையும் விஜய் சேதுபதி கண்டுபிடிக்கிறார். அதற்குப் பிறகான கதை குழந்தைகளும் யூகிக்க கூடியது. அதனை சில ட்விஸ்டுகளால் விறுவிறு திரைக்கதையாக்க முயற்சித்திருக்கிறார், இயக்குனர் அருண் குமார்.
 
வழக்கமான போலீஸ் கதையாக இருக்கக் கூடாது என்று கூடி தீர்மானித்திருக்கிறார்கள். காக்கியின் மிடுக்குக்கு இணையாக, விஜய் சேதுபதியின் குடும்ப வாழ்க்கையும் வருகிறது. ஆக்ஷன் மிளகாய்க்கு நடுவில் கணவன் மனைவி ஊடலும் கூடலுமாக செம காம்பினேஷன். கண்ணை பார்த்து பேசுடி என்று இவர் எகிறுவதும், அடிச்சா திரும்ப அணைக்க வருவார் என்று மனைவியாக வரும் ரம்யா நம்பீஸன் குழைவதும் அந்நியோன்யமான தம்பதியை கண்முன் காட்டுகிறது. போதாதற்கு இரண்டு குழந்தைகள். சுட்டிகளின் சேட்டைகள் ரொம்பவே க்யூட்.
 
வாத்தியாரை விஜய் சேதுபதி அடித்து இழுத்துவரும் காட்சியில் விஜய் சேதுபதியிடம் மிடுக்கு தெறிக்கிறது. சிறார் குற்றாவாளிகளை துப்பாக்கி காட்டி மிரட்டுகையில் துப்பாக்கி எதிர்பாராமல் வெடிப்பதை, சூழ்ச்சி என காட்டியிருக்கிறார்கள். இதேபோன்ற சம்பவம் உண்மையிலேயே சென்னையில் நடந்தது. குற்றவாளியான போலீஸை காப்பாற்றுவது போல் இந்தக் காட்சியை வைத்திருக்கிறார்கள். கற்பனைதான் என்றாலும், யதார்த்தத்தையும் இயக்குனர் கொஞ்சம் கவனத்தில் எடுத்திருக்கலாம்.
 
விறுவிறுப்பாகவும் இருக்கணும், யதார்த்தமாகவும் இருக்கணும் என்ற இரட்டை குதிரை சவாரி பல இடங்களில் தடுமாறினாலும் சேதுபதியை ரசிக்கலாம்.