வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (03:04 IST)

சலீம் - திரை விமர்சனம்

அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் நேர்மையான மருத்துவர் ஒருவர், சமூகத்தின் குற்றவாளிகளைத் தோலுரிப்பதற்காகத் துப்பாக்கி பிடிக்கும் படம்.

 
கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவராகச் சலீம் என்ற பாத்திரத்தில் விஜய் ஆண்டனி. அன்பு, கனிவு, நேர்மை, பொறுமை என அனைத்து நல்ல குணங்களும் கொண்டவர். ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து, அவர்கள் தரும் ஐந்து ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார். குறைந்த விலையில் உள்ள தரமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். மருத்துவமனையில் தங்காமல், வீட்டிலேயே தங்கி வைத்தியம் பார்க்கலாம் என ஆலோசனை வழங்குகிறார். 
 
மருத்துவமனையில்தான் அப்படி என்றால், வெளியில் இன்னும் ஒரு படி மேலே. ஆதரவற்றவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். அநாதை இல்லத்துக்குச் சென்று உதவுகிறார். தன் வீட்டுக்கு வெளியே தன் காரை எடுக்க முடியாமல், குறுக்கே அவரது காரை நிறுத்தியிருக்கும் எதிர் வீட்டுக்காரருடன் சண்டைக்குப் போகாமல், ஷேர் ஆட்டோவில் வேலைக்குப் போகிறார். 
 
இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணே, அக்ஷா பர்தசானி. வளமான உடற்கட்டுடன் அழகான சிரிப்பை அவர் வீசும்போது, முதல் காட்சியிலேயே வசீகரிக்கிறார். துடுக்குத்தனமும் படபடப்பும் முன்கோபமும் கொண்ட பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். அவசர சிகிச்சையின் காரணமாகச் சலீம் தாமதமாக வருவதும் குறித்த நேரத்தில் வராமல் போவதுமாக இருக்க, கோபத்தில் பட் படார் என்று வெடிக்கிறார். 

 
இந்நிலையில், பாலியல் வன்முறையால் சிதைக்கப்பட்டு, சாலையோர முட்புதர்களுக்கு நடுவே கிடைக்கும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவம் பார்க்கிறார். அது அவரது வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.
 
இதற்கிடையே, சலீமுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், சலீமை மணக்க மறுக்கிறார். "நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனச் சலீம் கேட்க, "நீங்க தப்பே பண்றதில்லை. அதுதான் பிரச்சினையே. எப்போதும் அமைதியா, பொறுமையா, நேர்மையாக இருந்தால், வாழ்க்கையில் ஒரு பெப்பர் அண்ட் சால்டே இருக்காது. அதனால் வேண்டாம்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். 
 
அதே சமயம், சலீமின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போக, மருத்துவமனை முதலாளி, அவரை வேலை விட்டு நீக்குகிறார். இந்த விரக்தியில் தண்ணி அடித்துவிட்டு, நடுவீதியில் நின்றுகொண்டு, 'நோ எண்ட்ரி'யில் செல்பவரை நிறுத்தி அறிவுரை சொல்கிறார். அந்த நபர், காவல் துறை அதிகாரியாக இருந்துவிட, இவரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறார். அவரிடமிருந்து அவர் துப்பாக்கியுடன் தப்பிக்கும் சலீம், ஒரு நட்சத்திர விடுதியில் அமைச்சரின் மகனையும் அவன் நண்பர்களையும் சிறை பிடிக்கிறார். 
 
அவர்களைச் சலீம் ஏன் சிறை பிடிக்கிறார்? அவரது நோக்கம் நிறைவேறியதா? என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.
மேலும்

இறுக்கமான முக பாவத்துடன், விறைப்பான உடல் மொழியுடன், தனக்கு ஏற்ற பாத்திரத்தை விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்திருக்கிறார். நான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது நடிப்பாற்றலை இந்தப் படம் செம்மையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இயல்பான மருத்துவராக மட்டுமின்றி, பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கூட அவர் சிறப்பாகப் பரிமளித்திருக்கிறார். காதலி தன்னைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்து நிற்கையில், "கடைசி வரை அநாதையாகவே இருக்க வேண்டியதுதானா?" என்ற ஒரே வசனத்தில் தன் தவிப்பைப் புரிய வைக்கிறார். 

 
முன்பாதியில் சாந்த சொரூபியாக இருக்கும் சலீம், பின்பாதியில் ஒட்டுமொத்தக் காவல் துறை, அரசியல் புள்ளிகள், ரவுடிப் பட்டாளம், ஊடகத்தினர் எனப் பலரையும் கதிகலங்க வைக்கிறார். அமைச்சர் மகனைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பவரிடம் உங்களுக்கு இப்ப என்ன வேணும் எனக் காவல் துறை அதிகாரி கேட்க, "சூடா ஒரு டீ" எனக் கேட்கும்போது, ரசிகர்களிடையே விறுவிறுப்பு ஏறுகிறது.
 
அமைச்சராக நடித்துள்ள ஆர்.என்.ஆர்.மனோகர், தனது பெரிய கண்களை உருட்டி மிரட்டுகிறார். அவ்வப்போது அவரே காமெடி பீஸாக மாறுவதும் நடக்கிறது. 
 
எம்.சி.கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, தெளிவு. விஜய் ஆண்டனியின்  பின்னணி இசை, படத்துக்குப் பெரிய வலுவாக அமைந்துள்ளது. மஸ்காரா, அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் ஆகிய பாடல்கள், பிரபலம் அடைந்து வருகின்றன.


 
பிற்பாதி ஓரளவு விறுவிறுப்பாகச் சென்றாலும் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' படம் நினைவுக்கு வருகிறது. அதிலும் இப்படித்தான் நல்லவரான ஒருவர் ஒரே ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவெல்லாம் மாநகரைச் சுற்றி வந்து பரபரப்பு ஊட்டுவார். சலீமில் அதன் பாதிப்பு இருக்கிறது.
 
நீதியை நிலை நாட்டுவதற்காகத் துப்பாக்கியுடன் புறப்படும் சலீம், காவல் துறையிடமிருந்து தப்பித்துச் செல்லும்போது, தொடரும் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது. இது, அமைதி வழியில் சாதிக்க முடியாது. துப்பாக்கிதான் தீர்வு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஷங்கரின் இந்தியன் படமும் இதையே வேறு காட்சிகளில் சொன்னது.

இயக்குநர் என்.வி. நிர்மல் குமார், திரைக் கதை அமைப்பிலும் அதைத் திரையில் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், நேர்மையாக நடப்பவன் கடைசியில் துப்பாக்கியைத் தூக்கித்தான் ஜெயிக்க முடியும் எனக் காட்டியதன் மூலம், கருத்தியல் ரீதியாகத் தோற்றிருக்கிறார்.
 
நல்லவனாக  வாழ்வது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைச் சலீம், படம் நெடுகக் காட்டுகிறது. இப்படியான படங்கள், மக்களை நல்லவராக வாழ்வதற்குத் தூண்டாமல், அதற்கு எதிரான மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இத்தகைய கதைகளும் காட்சிகளும், காந்தியத்தின் தேவையை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.