1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 அக்டோபர் 2016 (13:38 IST)

றெக்க - திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில், இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில், டி. இமான் இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஓளிப்பதிவில், ஆக்‌ஷன் படமாக வெளிவந்திருக்கிறது றெக்க. இந்த படம் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டின் ஆறாவது ஹிட்டாக அமைந்ததா என பார்ப்போம்.

 
பிரபல தாதாவான கபீர் சிங்கின் ஆட்கள் மற்றொரு ரவுடியான ஹரிஷ் உத்தமனின் தம்பியை கொன்றுவிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன், கபீர் சிங்கை பழிவாங்க காத்திருக்கிறார். இப்படி தான் கதை தொடங்குகிறது.
 
கும்பகோணத்தில் வேலை வெட்டி ஏதும் இல்லாமல், காதலுக்கு உதவும் வகையில் காதலர்களை சேர்த்து வைப்பதை வேலையாக செய்யும் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார். 
 
அப்படி இருக்க, ஒருமுறை ஹரிஷ் உத்தமனுக்கு நிச்சயமான  பெண்ணை தூக்கிச் சென்றுவிடுகிறார் விஜய் சேதுபதி. இதனால், ஹரிஷ் உத்தமனின் கோபத்தை சம்பாதிக்கிறார். ஹரிஷ் உத்தமன் விஜய் சேதுபதியையும் பழிவாங்க திட்டமிடுகிறான்.
 
இந்நிலையில், விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது, டாஸ்மாக்கில் ஹரிஷ் உத்தமன் ஆட்களிடம் பிரச்சினையில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதியின் நண்பர் சதிஷ். நண்பனை மீட்பதற்காக விஜய் சேதுபதி ஹரிஷ் உத்தமனிடம் செல்கிறார். 
 
விஜய் சேதுபதி, கபீர் சிங் இருவரையும் பழிவாங்க நினைக்கும் ஹரிஷ் உத்தமன், தனது திருமணத்தை நிறுத்திய விஜய் சேதுபதி இந்த வேலையை செய்தால், ஒன்று அரசியல்வாதியிடம் மாட்டிக் கொண்டு இறந்துபோவான். அதேநேரத்தில் வேலையை சரியாக செய்தால், தனது தம்பியைக் கொன்ற கபீர் சிங்கை பழி வாங்கியதாக இருக்கும் என்று முடிவெடுத்து, லட்சுமி மேனனை கடத்த சொல்கிறார். இதில் திருப்பம் என்னவென்றால் லட்சுமி மேனன், கபீர் சிங்கை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் பெண், அது தவிர மதுரையில் பெரிய அரசியல்வாதியின் மகள். 
 
தங்கையின் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுவதை விரும்பாத விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமனின் திட்டம் தெரியாமல் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து லட்சுமி மேனனை தூக்கிக் கொண்டு வந்து ஹரிஷ் உத்தமனிடம் ஒப்படைத்தாரா? தனது தங்கை திருமணத்தை நடத்தினாரா? அல்லது பிரச்சினை திசைதிரும்பியதா? என்பதே மீதிக்கதை. 
 
சேதுபதி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு மாஸ் படம். இப்படத்தில் ஆக்ஷனில் எல்லாம் விஜய் சேதுபதி அதிரடி காட்டியிருக்கிறார். அதேநேரத்தில், லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், வசனங்கள் உச்சரிப்பு என தனக்கே உரித்தான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
லட்சுமி மேனன் தனது எடையையும், மேக்கப்பையும் குறைத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் இவருடைய நடிப்பு செயற்கைத்தனமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது.
 
விஜய் சேதுபதியின் நண்பராக வரும் காமெடியன் சதிஷ், தந்தையாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், சேதுபதியின் அண்ணனாக வரும் கிஷோர், கும்பகோணத்து வில்லன் ஹரீஷ் உத்தமன், கோயமுத்தூர் வில்லன் கபீர் சிங், மீரா கிருஷ்ணன் ,மதுரை மணிவாசகம் உள்ளிட்ட எல்லோரும் படத்திற்கு பலம் செர்த்துள்ளனர்.
 
இயக்குனர் ரத்தின சிவா, விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக காட்டவேண்டும் என்பதற்காக அவருக்காகவே எடுக்கப்பட்ட கதையாக இருக்கிறது. கதை சரியாக இருந்தாலும் திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது.
 
டி.இமான் இசையில் பாடல்கள் எதுவும் கவரவில்லை. ஆனால், பின்னணி இசையில் அதிரடி கூட்டியிருக்கிறார். கே.எல்.பிரவினின் எடிட்டிங் துல்லியமாக இருக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தத்ரூபம்.
 
மொத்தத்தில் ‘றெக்க’ கொஞ்ச நாள் பறக்கும்....