வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By சி.பி.செந்தில்குமார்
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (16:15 IST)

புலிப்பார்வை - திரை விமர்சனம்

யுத்தப் பின்னணியில் உருவான முதல் தமிழ்ப் படம் என்ற முஸ்தீபுகளுடன் படம் ஆரம்பிக்குது.
 
ஆரம்பத்தில்  காட்சிகள்  குழப்பமா வந்து  போகுது. யுத்த  பூமியில் தெளிவான காட்சிகளை எதிர்பார்க்க  முடியாது.
 
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடக்கும் போர்க் காட்சிகள் கொஞ்ச  நேரம்  ஓடுது.

 
தமிழ்  இனத்தின் (உண்மையான) தலைவன் பிரபாகரன் மகன் பாலாவைச் சிங்களர்கள் பிடிச்சுடறாங்க. அவனைப் பிணையக் கைதியா வெச்சு, தலைவர் பிரபாகரனுக்கு ஒரு வேண்டுகோள் வீடியோ, சிங்கள ராணுவம் ரெடி பண்ணுது. அதில் பிரபாகரனின் முக்கிய தளபதிகள் 4 பேரை ராணுவத்திடம் ஒப்படைத்தால் பிரபாகரன் மகன் ஒப்படைக்கப்படுவான். கிட்டத்தட்ட எக்சேஞ்ச் ஆஃபர்  மாதிரி.
 
ஆனா, பிரபாகரன் அதுக்கு ஒத்துக்கலை. அவர் கூட இருக்கும் ஆட்கள் அவருக்கே தெரியாம அவர் மகனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடறாங்க. அவங்க வெற்றி பெற்றாங்களா? இல்லையா? என்பதே மிச்ச மீதிக் கதை.

 
இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒண்ணு சொல்லிடறேன். இது 70% கற்பனைப் படம். அதாவது பிரபாகரன் மகன், சிங்கள ராணுவத்திடம் பிடிபட்ட பின் என்ன  நடந்திருக்கும்? என உத்தேசமா கற்பனை பண்ணி எடுக்கப்பட்ட படம். இப்படியும் நடந்திருக்கலாம் அவ்வளவுதான். இது ஒரு வரலாற்றுப் பதிவு கிடையாது.
 
படத்தில் முதல் ஹீரோ, வசனங்கள் தான். பிரமாதமான வசனங்கள். அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் வசனங்கள். குறிப்பா, தமிழ் இனத் ததலைவரை வாரு வாருன்னு வாரிடறாங்க.
 
பாலாவா வரும் பையன் நடிப்பு பிரமாதம், அவர் சின்னப் பசங்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, வீர உரை ஆற்றுவது எல்லாம் செயற்கை தட்டுது.

 
பிரபாகரன் கேரக்டர்  இடைவேளை சமயத்தில் தான் வருது. அவர் வரும்போது தியேட்ட்டரில் ஆரவாரம். அச்சு அசல் அவரைப் போலவே தோற்றம். சபாஷ் இயக்குநர். பாத்திரத் தேர்வு அருமை. அவர் பேசும் வசனங்கள், வசன உச்சரிப்பு எல்லாம் அருமை.
 
வில்லனாக வரும் மேஜர் கேரக்டரை ராஜபக்சேவா சித்தரிச்சிருக்காங்க. அவர் மகன் கோழையாக வருவதும், அவனைப் பிரபகரன் மகனுடன் ஒப்புமைப்படுத்தி அடிக்கடி மேஜர் பேசுவதும் கதைப் போக்குக்குத் தேவை இல்லாதது. அவனை வீரனாக மாற்ற அவர் எடுக்கும் நடவடிக்கைகள், கமல்ஹாசனின் மங்கம்மா சபதத்தில் ஆல்ரெடி வந்தாச்சு.
 
திரைக்கதையின்  வேகத்தைப் பாதிக்கும் அந்தக் காதல் கதை எபிசோடு தேவை இல்லாதது. ரிலாக்ஸ் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆடியன்ஸ் போர்ப் பின்னணியைத் தெரிந்துகொள்ளவே. எனவே அதைத் தவிர்த்திருக்கலாம்.
 
பாடல் காட்சிகள் பிரமாதம். இசை வீர உணர்ச்சியைத் தட்டி எழுப்புது.
மேலும்

மனத்தைக் கவர்ந்த வசனங்கள்
 
1 வீரன் அழக்கூடாது. அதுவும் பயத்தால அழவே கூடாது # புலிபார்வை
 
2 பசியால மக்கள் செத்தா, அது நாட்டோட தப்பு. போரால மக்கள் செத்தா, அது நாட்டை ஆள்பவர்களோட தப்பு # புலிப்பார்வை
 
3 இங்கே (ஈழம்) துப்பாக்கி எடுத்த ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் ஒரு கதை இருக்கும், அதுல வலி இருக்கும் # பு பா
 
4 மழை இல்லாத வறண்ட பூமில கூட வாழ்ந்துடலாம். ஆனா யுத்த பூமில வாழவே கூடாது # பு பா
 
5 இந்தப் பூமில பிறந்தவங்க, மண்ணைப் பத்தி மட்டும் தான் நினைக்கனும், பெண்ணைப் பத்தி அல்ல # பு பா
 
6 உங்கப்பா எங்கே ஒளிஞ்சிருக்கார்?
 
பயந்தவன்தான் ஒளிவான். எங்கப்பா பயந்து நான் பார்த்ததே இல்லை # பு பா

 
7 தன் வாரிசுகளுக்கு மக்கள் சொத்தைத் தாரை வார்ப்பவன், சொத்து சேர்ப்பவன் தலைவனா இருக்கத் தகுதியே இல்லாதவன் # பு பா  (தலைவா! நம்மைத்தான்)
 
8 சயனைடு குப்பியை எப்பவும் இதயத்துக்குப் பக்கத்துலயே மாட்டி வெச்சிருக்கறவங்க நாங்க. எதுக்கும் பயப்பட மாட்டோம் # பு பா
 
9 போராளி வாழ்வில் காதல் வருமா?
 
காதல் வந்த பின்தான் பலர் போராளியாவே ஆகி இருக்காங்க # பு பா
 
10 நாட்டை  ஆள்பவர்கள்  எப்போதும் ஆபத்தானவர்கள். அவங்க  சுய நலத்துக்காக மக்களைப் பலி கொடுக்கத் தயங்க மாட்டாங்க # பு பா
 
11 பிரபாகரன் - தமிழனும் யானை இனமும் ஒண்ணு இருந்தாலும் இறந்தாலும் மத்தவங்களுக்கு உபயோகமாத்தான் இருப்பாங்க # பு பா
 
12 தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுபடை வீடு உண்டு.
 
எங்கள் தமிழ்த் தலைவனுக்கு நூறுபடை உண்டு # பு பா (பாடல் வரி)
 
13 இங்கே  இருந்து தனி ஈழத்துக்காகப் போராடுவதற்கு, எங்கேயாவது போய், பிச்சை எடுத்தாவது வாழ்ந்துடலாம் # பு பா
 
14 யுத்த களத்தில் பிடிபடறதும் சித்திரவதைப்படறதும் சகஜம்தான். எல்லா ஆபத்தையும் எதிர்பார்த்துத்தான் களம் இறங்கணும் # பு பா
 
15 நாம கத்துக்கிட்ட கலாச்சாரம் நம்ம செயல்களில் தான் வெளிவரணும் # புலிப்பார்வை

 
16  ராணுவத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இறப்பதால் ராணுவ வீரர்கள் மகன்கள், மனோவியல் ரீதியா கோழைகளாகவும் பயந்த சுபாவிகளாகவும் ஆகிடறாங்க # பு பா
 
17 எதிரிக்குப் பயந்து ஓடுவதை விட, சயனைடு சாப்பிட்டு நம் உயிரை நம்மை விட்டு ஓட விடுவது நல்லது # பு பா
 
18 ஆர்மிக்காரன் கண்ணுக்கு, எதிரில் நிற்பவரெல்லாம் போராளியாத்தான் தெரியும் # பு பா
 
படம் பார்க்கும்போது வெளியிட்ட ட்வீட்
 
1 இடைவேளை போடும்போது இயக்குநர்  நச் டச் # INTER(NATIONAL)MISSION
 
 
இயக்குநர் பாராட்டுப் பெறும் இடங்கள்
 
1 சென்சார் பார்வையில் பாஸ் செய்யும் அளவு இந்தியாவுக்கு ஆதரவாகச் சில வசனங்களைச் சாமார்த்தியமாக நுழைத்தது
 
2 பிரபாகரன், அவர் மகன் பாத்திரங்களுக்கு அச்சு அசல் அதே தோற்றத்துடன் நடிகர்களைத் தேர்ந்தெடுத்தது
 
3 அரசியல்வாதிகள் நிஜ முகத்தை வசனங்கள் மூலம் தோல் உரித்துக் காட்டியது

 
இயக்குநரிடம் சில கேள்விகள்
 
1 விடுதலைப்புலிகள் எல்லோரும் கிட்டத்தட்ட மிலிட்ரி வீரர்கள் போல் தான் இருப்பாங்க. ஆனா இதில் வரும் ஆட்கள், ஏதோ வீரப்பன் அடியாட்கள் போல் காட்டுத்தனமா இருக்காங்க. டிசிப்ளினே இல்லை.. குறிப்பா அவங்க ஹேர் ஸ்டைல். போலீஸ் கட்டிங் அடிச்சு விட்டிருக்க வேணாமா?
 
2 பிரபாகரன் பெரும்பாலும் யூனிஃபார்மில் இருக்கும்போது சிரிக்க மாட்டார். இதில் அடிக்கடி சிரிக்கிறார். அவர் கூட மிலிட்ரி கட்டிங் அடிக்கலை. ஹேர் ஸ்டைல் ஒத்து வரலை.
 
3 சிங்கள ராணுவம் அந்த சிடியை, பிராபகரன் ஆளிடம் கொடுத்து விடுவது, நம்பும்படி இல்லை. அவரைப் பின்தொடர, ஆள் அனுப்பி இருக்க மாட்டாங்களா? அல்லது சிடி அவர் கைக்குப் போய்ச் சேர்ந்ததா? எனச் சரி பார்க்க மாட்டாங்களா?
 
4 சிடி வாங்கிய விடுதலைப்புலி அதைத் தலைவனிடம் சேர்ப்பிக்காமல், காதலியின் பேச்சைக் கேட்டு அசால்ட்டாக இருப்பது, நம்பும்படி இல்லை. அவர் சேர்ப்பிக்கலைன்னாலும் யாரிடமாவது கொடுத்து விட்டிருக்கலாமே?
 
5 படகில் நடுக்கடலில் போகும்பொது திடீர் என அவர் ஞானோதயம் வந்து கடலில் குதித்து, நீந்திப்போய் சிடியைச் சேர்ப்பிப்பது, சிரிப்பை வர வைக்கிறது
 
சி.பி. கமெண்ட் - புலிப்பார்வை - அபாரமான வசனங்களுடன் யுத்தப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் 
 
இந்தப் படத்துக்கு நமது மதிப்பெண் = 2.5 / 5

(சி.பி.செந்தில்குமார், எழுத்தாளர்)