வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By கோபால்
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2014 (20:27 IST)

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - திரை விமர்சனம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், சமூகப் பொறுப்புடன் ஏதேனும் முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு படம் பண்ணுவதில் தீவிரம் காட்டுகிறார்கள். அதையும் காதல், காமெடி... என இதர மசாலாக்கள் குறையாமல் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தினால், பலவும் இரண்டும் கெட்டானாக ஆகிவிடுகின்றன. ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவிலும் அப்படி ஒரு முக்கிய பிரச்சினையை இயக்குநர் கையாண்டுள்ளார்.
 
கண்டேன் காதலை, சேட்டை என ரீமேக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த கண்ணன், சொந்தமாக எழுதிய கதை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் ஏற்படும் சந்திப்புகளும், பிரச்சனைகளும் படத்தில் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் முதல்பாதி முழுக்க ரயிலில் நடக்கிறது. இதில் விமலுக்கு ஜோ‌டி ப்ரியா ஆனந்த். கண்ணா லட்டு தின்ன ஆசையா விசாகா சிங்கும் படத்தில் இருக்கிறார். விமலுக்கு இணையான வேடம் சூரிக்கு. 

 
விமலின் நண்பர் சூரியின் காதல் விவகாரத்தால் ஊரை விட்டு ஓடும் விமலும், சூரியும் ரயிலில் பிரியா ஆனந்தைச் சந்திக்கிறார்கள். மருத்துவரான பிரியா ஆனந்த், ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பிரசவம் செய்து, அவரையும் குழந்தையையும் காப்பாற்றுகிறார். இதைப் பார்த்து பிரியா ஆனந்த் மீது காதல் கொள்ளும் விமல், அவருடன் நட்பாகப் பழகும் நேரத்தில், திடீரென்று ஒருவர் பிரியா ஆனந்தைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து விமல், பிரியா ஆனந்தைக் காப்பற்ற, அடுத்த ரயில் நிலையத்தில் மேலும் மூன்று பேர் கத்தியுடன் பிரியா ஆனந்தைக் கொல்ல முயல்கிறார்கள்.
 
அவர்களிடம் இருந்தும் பிரியா ஆனந்தைக் காப்பாற்றும் விமல், ரயிலில் செல்வது பாதுகாப்பு அல்ல என்று சாலை வழியாக அவரைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல, அங்கேயும் ஒருவர் பிரியா ஆனந்தைக் கொலை செய்ய முயல்கிறார். இப்படி தொடர்ந்து பிரியா ஆனந்தைக் கொலை செய்ய முயலும் அவர்கள் யார்? அவர்கள் ஏன் பிரியா ஆனந்தைக் கொலை செய்யத் துரத்துகிறார்கள், என்ற உண்மையை அறிந்துகொண்ட விமல், அவர்களிடம் இருந்து பிரியா ஆனந்தைக் காப்பாற்றினாரா இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்.

 
’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறே, விமல்-சூரி படம் முழுவதும் வருகிறார்கள். விமலை ஆக்‌ஷன் ஹீரோவாகக் காண்பித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக, ஆக்‌ஷன் படமாக எடுக்க வேண்டிய படத்தைக் காமெடி படமாக இயக்கியிருக்கும் கண்ணன், சண்டைக் காட்சிகளைக் காமெடியாக எடுத்து, ரசிகர்களைக் கடுப்பாக்குவதையாவது தவிர்த்திருக்கலாம்.
 
ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, பிறகு அடுத்த கட்டத்திற்குப் போகும் நடிகர்கள் மத்தியில் விமல், இன்னமும் தனது அப்பாவித்தனமான பாணியிலேயே நடித்து வருகிறார். இதற்கு மாறாக அவர், களவாணி படத்தைப் போன்ற படங்களில் நடித்துவிட்டுப் போகலாம்.
 
டூயட் பாடல் இல்லை என்பதைத் தவிர, சூரியும் இப்படத்தில் ஒரு ஹீரோவாகவே வலம் வருகிறார். அதற்காகவே அவர் காமெடி களத்தில் பயணிப்பதைக் குறைத்துக்கொண்டு கதாபாத்திரமாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இது விமல், சூரி இணைந்து நடிக்கும் ஆறாவது படம். விமலும் சூரியும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்கள் என்பதால், அவர்களின் நட்பு, திரையிலும் தொடர்கிறது.

பிரியா ஆனந்துக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம். விமலைக் காட்டிலும் இவருக்குத் தான் படத்தில் கூடுதல் வேலை. அந்தக் கூடுதல் வேலையை ரொம்ப நன்றாகவே செய்துள்ள பிரியா ஆனந்த், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.
 
படத்தில் இடம்பெற்ற அத்தனை நடிகர்களையும் தனது அபார திறமையால் நாசர் பின்னுக்குத் தள்ளுகிறார். தேவர் மகன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் அவருடைய கெட்டப்பும், அதில் அவர் காட்டிய திறமையும் பலே சொல்ல வைக்கிறது. நாசரின் மனைவியாக வரும் அனுபமாவும் தனது பங்கிற்கு வில்லித்தனத்தைக் கொஞ்சம் தூக்கலாகவே கொடுத்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிங்கமுத்துவின் காமெடி சிரிக்க வைக்கிறது. ஆனால் தம்பி ராமையா வரும் சில காட்சிகள் பெரிதாக இல்லை.
 
 

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தாலும், சில பாடல்கள் எங்கேயோ கேட்டது போலவே உள்ளது. ஒரு பாடலைப் பாடியுள்ள நடிகை ல‌ட்சு‌மி மேன‌னின் குரல் மிக இனிமை. பி.ஜி.முத்தையா, பாடல் காட்சிகளை ரசிக்கும்படியாகப் படமாக்கியுள்ளார்.
 
சேசிங், ஆக்‌ஷன் என்று நகர வேண்டிய திரைக்கதையை, காமெடி, காதல் என்று மென்மையாகக் கையாண்டு, சொல்ல வந்ததை ரப்பர் போல இழுக்காமல் சுருக்கமாக இரண்டு மணி நேரத்தில் சொல்லியிருந்தாலும், சொல்லிய விதத்தில் எந்தவிதமான சுவாரஸ்யமும் கொடுக்கவில்லை இயக்குநர் கண்ணன்.
 
முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், ஒலி மாசு (சவுண்ட் பொலியூஷன்) குறித்தும் ரொம்பவும் தெளிவாகச் சொன்ன இயக்குநர் கண்ணனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
 
ஒலி மாசினால் ஏற்படும் தீமை, அதைச் சுற்றிப் பயணிக்கும் கதை என்று திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் கண்ணன், இரண்டாம் பாதியில் எப்படி படத்தை முடிக்க வேண்டும் என்பதில் ரொம்பவே சிரமப்பட்டு க்ளைமாக்ஸை ரொம்பச் சாதாரணமாகக் கையாண்டுள்ளார்.
 
’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்பது தலைப்பில் மட்டுமே, படம் என்னவோ ‘ஒரு ஊர்ல ரெண்டு ஜோக்கர்’ என்ற நிலையில் தான் இருக்கிறது.

இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் - 2 / 5

இந்தப் படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்