வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (12:13 IST)

நெருங்கி வா முத்தமிடாதே - திரை விமர்சனம்

பெண் இயக்குநர் என்றால் காதல் படம் மட்டும்தான் எடுக்கணுமா? எங்களுக்கும் கமர்ஷியலில் இறங்கி அடிக்கத் தெரியும். கமர்ஷியலோடு மெசேஜும் வச்சிருக்கேன் என்று துணிச்சலாகப் படம் எடுத்ததற்கே லட்சுமி ராமகிருஷ்ணனைப் பாராட்டலாம். அப்போ படம்...? 
இந்தியாவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டில் தத்தளிக்கிறது. இந்த நேரத்தில் லாரி ட்ரைவரான ஷபீருக்கு வருகிறது ஒரு தொழில் வாய்ப்பு. இரண்டாயிரம் லிட்டர் டீசலைக் கடத்த வேண்டும். தொழில் வாய்ப்பை தருகிறவர் ஷபீரின் முதலாளியான ஏ.எல்.அழகப்பன். இவர் தொகுதி எம்.எல்.ஏ.வும்கூட.
 
ஷபீரின் இந்தக் கடத்தல் பயணத்தில் சிலரும் பங்கு கொள்கிறார்கள். அதில் ஒரு காதல் ஜோடியும் அடக்கம். நடுவில் தம்பி ராமையாவும் ஏறிக்கொள்ள முதல் ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.
 
ஷபீர் கடத்தும் டீசல் ஒரு தீவிரவாதியைத் தப்புவிக்க என்பது பிறகுதான் அவருக்குத் தெரிய வருகிறது. ஹீரோவாச்சே... முதலாளியையே எதிர்க்கிறார். அந்தத் தீவிரவாதி யார் என்றால், நெய்வேலி அனல்மின் நிலையத்திற்குள் சென்று அதன் ப்ளூப்ரிண்டை ஆட்டையைப் போட்டவன். அவன் தப்பிச் செல்லத்தான் இந்த இரண்டாயிரம் லிட்டர் டீசல்.
 
படத்தைக் குறித்து ஒரே வரியில் சொல்வதென்றால், ப்ளூபிரிண்ட் எல்லாம் நல்லாதான் இருக்கு பில்டிங்கில்தான் மொத்த சேதாரமும். 

நெருங்கி வா முத்தமிடாதே படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

ஒரே நாளில் நடக்கிற பல்வேறு கதைகளை ஒன்றிணைத்திருப்பதால் திரைக்கதையில் நிறைய சிக்கல்கள். பியாவின் கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் வந்து செல்கிறது. அதேபோல்தான் காதல் ஜோடிகள் எபிசோடும். அந்த பைட்டை படத்தில் வைக்காமலே இருந்திருக்கலாம்.
அனல்மின் நிலையத்தில் ஆட்டையப் போட்ட தீவிரவாதி, அதற்கு உடந்தையான மத்திய அமைச்சர், அவன் தப்புவதற்கு டீசல் கடத்தும் எம்.எல்.ஏ. என்று பாராளுமன்றத் தேர்தல் அளவுக்குப் பெரிதாக வியூகம் போட்டு, வார்ட் எலெக்ஷன் நடத்திய மாதிரி ஒரு ஃபீலிங். 
 
அடித்து தூள் கிளப்ப வேண்டிய ஸ்கிரிப்டை உதிரிக் காட்சிகளால் ஊசிப் போக வைத்துள்ளார் இயக்குநர். மேட்லி புளூஸின் பெயர் வாயில் நுழைய மறுப்பது போல, காதில் நுழைய மறுக்கிறது அவரது இசை. வினோத் பாரதியின் ஒளிப்பதிவு ஓகே. சில லாங் ஷாட்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
 
நெருங்கி வா முத்தமிடாதே - ஃபுட்பால் கிரவுண்டில் நடத்தப்பட்ட கில்லி தாண்டு.
 
இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் - 1.5 / 5
 
நெருங்கி வா முத்தமிடாதே படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்