வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By சங்கரன்
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (11:42 IST)

நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்-விமர்சனம்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு உயிர் கலந்திருக்கிறது. அதனால் எந்த ஒரு செயலையும் ஏனோதானோவென்று கடமைக்குச் செய்யாமல் ஆத்மார்த்தமாக, உணர்வுப் பூர்வமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விளைவு பூதாகரமாகி விடும் என்பதை இரண்டே கால் மணி நேரத்தில் நச் சென்று ஆணியடித்தாற் போல் சொல்லியிருக்கிறார், இயக்குநர் என்.ஜே.கிருஷ்ணா.

குற்றமா அப்படி என்றால் என்ன? அது  எங்குள்ளது என்று பூதக்கண்ணாடி பார்த்துக் கேட்குமளவிற்கு அப்படி ஒரு நல்ல கிராமம் தான் பொற்பந்தல். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் கிராமத்து தாய்மார்களாக இருந்தால் மூக்கின் மேல் விரலை வைத்து விடுவார்கள். அம்மாடியோவ்....இப்படியும் ஒரு  கிராமமா என்று பெருமூச்சு விடுவார்கள்.

அப்படி ஒரு கிராமத்தில் அதுவும் 5 முறை ஜனாதிபதி விருது வாங்கிய கிராமத்திற்கு எதற்கு காவல் நிலையம் என்று அதை மூட உத்தரவு வர, அங்கு பணிபுரியும் நாலு போலீசார்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் நாலு அவர்கள் தங்கள் வேலையை தக்க வைப்பதற்காக போராடும் முயற்சியும், அதற்காக அவர்கள் போடும் சதி வேலைகளும், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளும் படத்தின் கதையோட்டமாக உள்ளது.

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை, குரங்கு கையில பூமாலை கொடுத்தாற்போல், ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம், நாம ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் போன்ற பழமொழிகளை நினைவுகூர்கிறது கதை. திரைக்கதை பின்னி பெடலெடுக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நம்மை அடுத்து என்ன அடுத்து என்ன என்று பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. காமெடி சரவெடியாக காட்சிக்கு காட்சி அரங்கேறியிருக்கிறது. இத்தனை நாள் கழித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும் தமிழ்சினிமா இதுவாகத் தான் இருக்கும். படத்தில் நடித்த கேரக்டர்களில் கதாநாயகன் அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள், பன்னி மூஞ்சு வாயன் யோகிபாபு நம்மை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார்கள்.

பொற்பந்தல் கிராமம் நல்ல கிராமம் தான் என்பதைக் காட்ட இயக்குநர் முதல் அரை மணி நேரம் நமக்காக செலவழித்திருக்கிறார். மது, புகை தடை செய்யப்பட்ட ஊர் பொற்பந்தல் என்று நம்மை வரவேற்கிறது அவ்வூர் போர்டு.  ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தரும் அவ்வூரின் அருமை பெருமைகள் இதோ. தங்கச்சங்கிலி நடுரோட்டில் கிடக்க, அதை யாருமç; எடுக்க மறுக்கிறார்கள். கேட்டால், அவர்களாகவே வந்து எடுத்துக் கொள்வார்கள் என்று பதில் வருகிறது.

அண்ணாச்சி கடையில் பிஸ்கட் வாங்கும் சிறுவனுக்கு அவர் அதிகமாக பிஸ்கட் கொடுத்து விட, சிறுவனோ பழனி பஞ்சாமிர்தமாய் (அம்புட்டு நல்லவனாம்) அதிகமான பிஸ்கட் பாக்கெட்டுகளை அவரிடமே திருப்பி கொடுக்கிறான். ஓட்டலுக்கு காய்கறிகளை சப்ளை செய்ய வருபவரிடம் கடை முதலாளி சரக்கைப் போட்டுட்டு காச கல்லாவில எடுத்துட்டுப் போப்பா என்கிறார். அவ்வளவு ஏன்? அவ்வூர் தலைவரிடம் சாக்கடை அடைப்பு என்ற தகவல் வர, உடனே வெள்ளையும் சுள்ளையுமாக வந்த அவர் கொண்டு வந்திருந்த
பணப்பையை அண்ணாச்சி கடையில் ஒரு ஓரமாக வைத்து விட்டு, சட்டையைக் கழற்றி தொங்க விட்டு, சாக்கடையில் இறங்கி சரி செய்கிறார்.! கேட்டால், இந்த வேலைக்கெல்லாம் அவர் அடுத்தவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க மாட்டார் என்கிறார்கள்.

மாமியாரும்‡ மருமகளுக்குள் இவ்வளவு ஒற்றுமையா என்னும் அளவிற்கு ஒருவருக்கொருவர் ஏகபோகமாக விட்டுக்கொடுக்கின்றனர். அந்த ஊரில் திருட வரும் திருடனுக்கு தடபுடலாக விருந்து கொடுத்து அவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து, பலத்த மரியாதையுடன் அனுப்பி வைக்கிறார்கள். காவல் நிலையத்திலோ ஞாயிறு விடுமுறை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. அம்புட்டு நல்லவங்களாம் அவ்வூர்க்காரங்க. அதனால் அவர்களே காவலுக்கு வாரத்துக்கு ஒருநாள் இப்படி விடுமுறை கொடுத்துர்றாங்க.

சிங்கப்பூர் மாப்பிள்ளைக்கு மாமனார் தன் ஊரில் உள்ள இவ்வளவு அருமைபெருமைகளையும் சொல்வதையும் கடைசியில் அவரே ஒழுங்கா உயிரோடு வீடு போய் சேருங்க இங்க அப்படி ஒரு கலவரம் என்று ஊருக்கு பாதுகாப்போடு பஸ் ஏற்றிவிடுவதும் நம்மை சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சண்முக பாண்டியனாக வரும் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அருள்நிதிக்கு நச்சென்று பொருந்தியுள்ளது. காமெடியிலும் கலக்கியிருக்கிறார். அவருடன் இணைந்து ஏட்டு சிங்கம்புலியும், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் பகவதி பெருமாளும், திருந்திய திருடனாக வரும் பன்னி மூஞ்சு வாயன் நம்மை நகைச்சுவை பன்னீரில் நனைய விட்டிருக்கிறார்.

காதலி சுபாவாக வரும் ரம்யா நம்பீசன் அழகு பதுமை. ஆசிரியையாக வந்து அருள்நிதி காதலிக்க குறும்பு செய்வதும் அழகு. அருள்நிதி அவரிடம் காதலை சொல்ல தயங்குவதும், அடிக்கடி காதலிப்பது போல் கனவு காண்பதும் இளசுகளை கவர இயக்குநர் செய்த இன்ப சதி.

இயக்குநரிடம் ஒரு கேள்வி: படத்துல இவ்ளோ சிரிக்க வெச்சிருக்கீங்களே, எங்காச்சும் ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்களோ?

அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு பி.ஆர்.ரெஜினின் கைதேர்ந்த இசை. காதல் கனிரசமே நம்மை அந்த காலத்திற்கே இழுத்துச் செல்கிறது என்றால், என்ன நடக்குது பாடல் நம்மை யோசிக்க வைக்கிறது. மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு கிராமத்தின் அழகை அள்ளியிருக்கிறது. டிமாண்டி காலனியில் தொடர்ந்த அருள்நிதி கதையை லாவகமாக தேர்வு செய்து வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் இந்த ஆண்டின் ஈடு இணையற்ற காமெடி படம் என்பதில் ஐயமில்லை. குறைந்த பட்சத்தில் படத்தின் வெற்றிக்கான அத்தனை பார்முலாக்களையும் சுமந்து வந்துள்ளது படம்.