1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (19:41 IST)

கடம்பன் - சினிமா விமர்சனம்

காட்டில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எப்படி அந்த வனத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வருகிறது கடம்பன்.


 

 
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் பகுதியில் நாயகன் கடம்பன் (ஆர்யா) தன் கூட்டத்துடன் வசித்து வருகிறான். அந்த மலைப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்காக இவர்களைக் காலி செய்ய விரும்புகிறது ஒரு சிமெண்ட் நிறுவனம். அதைத் தடுக்கும் முயற்சியில் பல உயிர்களை இழந்தாலும், கடைசியில் காட்டைக் காப்பாற்றுகிறார்கள் நாயகனும் அவரது கூட்டத்தினரும்.
 
இந்தப் படத்திற்காக பல மாதப் பயிற்சியின் மூலம் உடலை மெருகேற்றியிருக்கும் ஆர்யாவுக்கு காதல் காட்சிகளில் ரொமான்ஸ் வரவில்லை என்றாலும் மலை உச்சியிலிருந்து குதிப்பது, வேரைப் பிடித்துத் தொங்குவது, ஓடுவது என படம் முழுக்க வரும் சர்க்கஸ் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். கேத்தரின் தெரசா, சிறப்பாகவே நடிக்க முயற்சி செய்திருந்தாலும் மலை கிராமத்தில் வசிக்கும் பெண் பாத்திரத்திற்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. ஆடுகளம் முருகதாஸின் காமெடி, பல சமயங்களில் சிரிப்புக்கு பதிலாக எரிச்சலையே மூட்டுகிறது. ரேஞ்சராக நடித்திருப்பவர் படத்தில் மலைவாழ் மக்களைக் கொடுமைப்படுத்துவதோடு, வசனங்களில் தமிழையும் கடித்துத் துப்புகிறார்.


 

 
இந்தப் படத்தின் முக்கியமான பலம் ஒளிப்பதிவு. தாய்லாந்தின் காடுகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், அட்டகாசம். ஆனால், பல காட்சிகளில் கிராஃபிக்ஸ் கைவிட்டிருப்பதால் சற்று செயற்கையாகத் தென்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ஒரே ஒரு பாடலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
 
இம்மாதிரி இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் பற்றிய படங்களில் வரும் முக்கியமான பிரச்சனை, மக்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் பிரதான கதையோடு முடிச்சுப்போட்டு சொல்ல முயல்வது. கடம்பனில் அந்தத் தொல்லை இல்லை. நேர்கோட்டில் செல்கிறது கதை. படத்தின் முதல் பாதியில், கடம்பவன மக்களுக்கும் காட்டிற்கும் உள்ள பிணைப்பு, அவர்கள் அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல், நாயகன் - நாயகி காதல் என்று போகிறது படம். ஆனால் இடைவேளைக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ படமாகிவிடுகிறது.
 
இருபது பேர் சேர்ந்து நவீன எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்க ஹீரோ மீது ஒரு குண்டுகூட படாமல் இருப்பது, திருவோட்டுக் காயை கால்பந்தைப் போல உதைத்து லாரிகள், ஜேசிபி எந்திரங்களை உடைப்பது, டயர்களை உருட்டிவிட்டு எதிரிகளை துவம்சம் செய்வது என தொடர்ந்து நம்ப முடியாத காட்சிகள் அணிவகுக்கின்றன.
 
சுரங்கத் தொழிலுக்காக காடுகள் அழிக்கப்படுவது என்பது தீவிரமான, தற்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பிரச்சனை. அரசு, காவல்துறை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு புறமும் எளிய வனவாசிகள் மறுபுறமும் இருக்கும் நிலையில், உண்மையிலேயே இந்தப் பிரச்சைனையை எப்படி தீர்க்க முடியும் என விவாதித்திருக்க வேண்டும். எப்படி இந்த விவகாரத்திற்கு எளிய மக்களின் சார்பாக ஒரு தீர்வு இருக்க முடியும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், கொடூரமான வில்லன் VS சக்திவாய்ந்த நாயகன் என குறுக்கிவிட்டார் இயக்குனர் என்பதுதான் ஏமாற்றம்.