வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (12:09 IST)

கல்கண்டு - திரை விமர்சனம்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம். தாத்தா காமெடியில் நாயகன் என்றால் பேரன் கதாநாயக காமெடியன்.
 
வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல பள்ளி ஆசிரியர் முத்துராமனின் இளைய மகன் கஜேஷ். பிளஸ் டூ வே திக்கித் திணறி பாசாகும் அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற விரலுக்குப் பொருந்தாத வீக்கம் அப்பாவுக்கு.

அதற்குரிய மதிப்பெண் இல்லாததால் அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் அண்ணன் (கல்லூரி அகில்) தரும் ஐம்பது லட்சத்தை மந்திரியிடம் தந்து மெடிக்கல் சீட் வாங்க முயற்சிக்கிறார் கஜேஷ். அங்கேயும் அப்ளிகேஷன் நம்பரை மாற்றி எழுதித்தர அவருக்கு வரவேண்டிய சீட் வேறொரு பெண்ணுக்கு போய்விடுகிறது.
 
இவ்வளவு பொறுப்பான பையன் படித்து டாக்டரானால் நோயாளிகளின் கதி..?
 
ஐம்பது லட்சத்தை அனாமத்தாக தந்த பிறகு அதை மறைக்க சென்னையில் எம்பிபிஎஸ் படிப்பதாகச் சொல்லி ஒரு மேன்ஷனில் அடைக்கலம் புகுகிறார் கஜேஷ். வந்த இடத்தில் தனது பணத்தில் டாக்டருக்குப் படிக்கும் டிம்பிளை சந்திக்கிறார். கண்டதும் காதல்.

இவர் விரட்டி விரட்டி காதலிக்க, அவர் விலகி விலகிச் செல்ல, தொந்தரவுக்குப் பயந்து கஜேஷை காதலிப்பது போல் நடிக்க ஆரம்பிக்கிறார் டிம்பிள். கடைசி வருடம் கஜேஷுக்கு கல்தா தந்து டிம்பிள் மாயமாகிவிட, அவரைத் தேடி ஊர் ஊராக சுற்றுகிறார் கஜேஷ்.
 
கல்கண்டு படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
http://bit.ly/Kalkandu-Tix


டிம்பிளை அவர் கண்டு பிடித்தாரா? டிம்பிள் அவரது காதலை ஏற்றுக் கொண்டாரா? மகனின் தவறை அப்பா மன்னித்தாரா? கேள்விகளுக்கான பதிலை காமெடியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
கஜேஷின் தோற்றத்துக்கும், உடல்மொழிக்கும் காமெடிதான் செட்டாகிறது. ஒத்த கயிறில் வித்தை பழகுற மாதிரி நடிப்பில் அப்படியொரு தடுமாற்றம். போகப் போக சரியாகலாம். இன்னொரு கதாநாயகன் என்று சொல்லலாம் கஜேஷின் அண்ணனாக வரும் கல்லூரி அகிலை. அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளையாச்சே. சொல்லி வைத்த மாதிரி மணமேடையில் மணப்பெண்ணை தியாகம் செய்கிறார். 
 
கஞ்சா கருப்பு இப்போதெல்லாம் கஞ்சா வெறுப்பாக மாறிக் கொண்டிருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பேசுப்பா ராசா என்று அவரை பேச விட்டிருப்பது கொடுமை. வழக்கம்போல ஜஸ்ட் பாசாகிவிடுகிறார் மயில்சாமி. சேஸிங் காட்சியில் மனிதர் வயிறை புண்ணாக்கிவிடுகிறார்.
 
இசை கண்ணன். சில பாடல்கள் காதுக்கு இதம். பின்னணி இசை காட்சிக்கேற்ற பக்கவாத்தியம்.
 
பழசாகி பொத்தல் விழுந்த கதையை காமெடி கொண்டு தைக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். கிழிசல் தெரிந்தாலும் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்கலாம். 

இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் - 1.5 / 5
 
கல்கண்டு படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
http://bit.ly/Kalkandu-Tix