வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (10:16 IST)

கொம்பேன்டா...(கொம்பன் விமர்சனம்)

தீர்ப்பு மதியதுக்குப் பிறகு வெளியானது. அதன் நகலை வாங்கினார்களா, தெரியாது. அரை மணி நேரத்தில் போஸ்டர் ஒட்டி கவுண்டரைத் திறக்க, அம்மியது கூட்டம். திறந்தவெளி மைதானம் போலிருக்கும் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கே வியாழன் ஆறு மணி காட்சிக்கு நிரம்பி வழிய, படம் தொடங்குவதற்கு முன்பே தெரிந்துவிட்டது, கொம்பன் ஹிட்.
 
 
புலியை காட்டி, இது புலி என்று வசனம் வைக்க வேண்டுமா? முறுக்கிய மீசை, முணுக்கென்று வரும் கோபம் இரண்டையும் வைத்தே கார்த்தியின் குலம் கோத்திரம் எல்லாம் தெரிந்துவிடுகிறது. ஆமாம், எதுக்கு இன்னும் பூடகம். தேவர் சாதி சனங்களைப் பற்றிய கதைதான் கொம்பன். ஆனால், அடித்துக் கொள்வதும், அன்பு காட்டுவதும், பெண் எடுப்பதும் எல்லாம் ஒரே சாதிக்குள். வில்லனை வேறு சாதியாக காட்டிட்டாங்க என்றதெல்லாம் வெறும் வம்பு.
 
வெள்ளநாடு, செம்பநாடு, அரசநாடு என்று மூன்று கிராமங்கள். கார்த்தி அரசநாடு. ஆடு வியாபாரி. அடிதடி இஷ்ட தெய்வம். அரசநாட்டைச் சேர்ந்தவர், குண்டன் ராமசாமி. கெட்டவர். ஆகவே, வில்லன். கார்த்திக்கும் அவருக்கும் அடிதடி தகராறு. கார்த்தியையும் குடும்பத்தையும் கூண்டோடு போட நினைக்கிறார் குண்டன்.
 
இந்த ஹார்ட்வேர் எபிசோடில் சாப்ட்வேராக லட்சுமி மேனன். அவர் செம்பநாடு ராஜ்கிரணின் மகள். கார்த்திக்கு அவரை பார்த்ததும் காதல் ஏற்படுகிறது. அவரையே திருமணம் செய்து வைக்கிறது சுற்றமும் நட்பும். அப்பாவை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் கார்த்திக்கு மனைவியாகிறார் லட்சுமி மேனன். 

கார்த்தி தனது கோபதாபத்தை மாமனாரிடம் காண்பிக்க, ராஜ்கிரணின் மண்டை உடைகிறது. மண்டையும், மனஸ்தாபமும் சரியாகும் போது, குண்டன் ராமசாமி கொலை வெறியுடன் காய்களை நகர்த்த, குண்டனின் முன்வினை அவரை பழிவாங்க, சுபம்.
 

 
கொம்பன் வெளியானால் பாலாறு ஓடும் தென் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றவர்கள் எங்கே? குட்டிபுலியில் எட்டிப் பார்க்கும் சுயசாதி பெருமைகூட கொம்பனில் இல்லை. முத்தையா... ஒரே படத்தில் திருந்திட்டீங்களே.
 
கொம்பன் என்றால் ஆண் யானை. பொம்பள வேலைக்கு வந்தா உனக்கு இளப்பமா இருக்குதா? என்று எதிராளியை கார்த்தி நெஞ்சில் எட்டி மிதிக்கையில் கொம்பனைப் போலதான் இருக்கிறார். அந்த கம்பீரம்தான் படத்தின் சகல பலமும். நின்று விளையாடியிருக்கிறார். அவருக்கு இணையாக சிலம்பம் சுற்றுவது, வசனங்கள்.
 
தொட்டதுக்கெல்லாம் பொசுக் பொசுக்கென்று அடிதடியில் இறங்கும் நாயகன் என்ற வழக்கமான ஒன் லைனில், கொஞ்சம் எமோஷனை தூவி, ரசிகர்களை குழப்பாமல் கதை சொல்லியிருக்கிறார் முத்தையா. குட்டிபுலியின் அபத்தங்கள் இதில் இல்லாதது ஆறுதல். மாமனார் சென்டிமெண்டும், அச்சு அசலான கிராமத்து மனிதர்களும் எளிமையான கதைக்கு வலு சேர்க்கின்றன. 
 
வெறும் சோறு போட்டாலே விருந்தாக நினைத்து சாப்பிடுகிற தமிழ்ப்பட ரசிகனுக்கு கொம்பன் கறிச் சோறு.