வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:09 IST)

கிடாரி - திரைவிமர்சனம்

கிடாரி - திரைவிமர்சனம்

நடிகர் சசிகுமாரின் சொந்த தயாரிப்பில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கிடாரி. பிரசாத் முருகேசன் இயக்கத்தில் நிகிலா விமல் ஜோடியாகவும், சூரி காமெடியனாகவும், நெப்போலியன், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் கிடாரி.


 
 
தமிழ் சினிமாவில், கிராமத்து ஸ்டைலில், அருவா, கத்தி, சண்டை, ரத்தம் என திரைப்படங்கள் வந்த வெகுகாலம் ஆகிவிட்டது. ட்ரெண்ட் மாறி புது ட்ரெண்டில் பயணித்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் மீண்டும் பழைய ட்ரெண்டுக்கு சென்றுள்ளார்கள் கிடாரியில்.
 
சசிகுமார் படம் என்றால் இப்படி தான் இருக்கும் என சொல்லும் அளவுக்கு வழக்கமான சசிகுமார் படமாகவே வந்திருக்கு.
 
ஊரில் பெரிய மனுஷனாக வலம் வருபவர் வேல ராமமூர்த்தி. ஊரே தனது பேச்சை கேட்க வேண்டும், தான்னை கண்டால் ஊரே பயப்பட வேண்டும் என வலம் வருபவர் அவர். வேல ராம மூர்த்தியை யாராவது எதிர்த்தால் அவர்களை உடனடியாக தீர்த்துக்கட்டுவதே சசிகுமாரின் வேலை.
 
இப்படி சசிகுமாரின் அடாவடியால் ஊரில் பெரிய மனுஷனாக வலம் வரும் வேல ராமமூர்த்தியை யாரோ வெட்டிக்கொலை செய்ய, அது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
 
ஊரில் பல எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் வேல ராமமூர்த்தியை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
 
படத்தில் பல பிளாஷ் பேக் காட்சிகள் வருவது சலிப்படைய வைக்கிறது. முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் படம் ஓரளவுக்கு வேகம் எடுக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் நெப்போலியன் பிளஷ்பேக் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
 
தற்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு படத்தை எடுக்காமல் 80, 90-களில் வருவதை போல படத்தை எடுத்திருக்கிறர் இயக்குனர். அளவுக்கு அதிகமான இரத்தக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
 
எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் கம்பீரமான நடிப்பு, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கலாம். குறும்புத்தனமான நடிப்பால் நிகிலா அனைவரையும் கவர்கிறார்.
 
படத்திற்கு ஏற்றவாரு காட்சிகளை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிர். பாடல்கள் சொதப்பினாலும், பின்னணி இசையில் கைத்தட்டல் வாங்கியிருக்கிறார் தர்புகா சிவா. சசிகுமாரின் எதார்த்தமான நடிப்பு இந்த படத்திலும் தொடர்கிறது.
 
படத்தில் வன்முறை காட்சிகளை குறைத்து, முதல் பாதி திரைப்படத்தில் திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருந்தால் கிடாரி மதிப்பை பெற்றிருப்பான்.
 
ரேட்டிங்: 2.5/5