வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (15:15 IST)

கத்தி - திரை விமர்சனம் 1

"கம்யூனிசம் என்பதை ஒரு வரியில் சொல்லுங்கள்" எனக் கத்தி திரைப்படத்தில் ஜீவானந்தம் எனும் பெயரில் நடித்துள்ள விஜயிடம் கேட்கிறார் அவரின் திரைப்படத் தங்கை.
 
"பசி அடங்கியபின் சாப்பிடும் இட்டிலி உனக்குச் சொந்தம் அல்ல, அடுத்தவனுக்கே சொந்தம்" என்கிறார் ஜீவானந்தம்.
 
இட்டிலி 1 ரூபாய்க்கு விற்கும் அம்மா உணவகம் உள்ள நாட்டில், இட்டிலி தேசியமயமாகும் அபாயம் இல்லை என மனத்தைத் தேற்றிகொண்டேன்.

 
படம் பார்த்தால் என்டெர்டெய்ன்மெண்ட் எனும் நிலை மாறி, படம் பார்த்தால் கூடவும் ஒரு மெஸேஜை அழுத்திச் சொல்ல வேண்டும் என்பது விதியாகிவிட்டது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலு, கொக்கோகோலா கம்பனிக்கு எதிராக ஒரு மெஸேஜ் சொல்லியிருப்பார். கத்தியிலும் கொக்கோகோலா தான் வில்லன். சென்சாருக்கு பயந்தோ என்னவோ, விஜய் மல்லய்யா, 2ஜி, கொக்கோகோலா எனப் பலரையும் பெயர் சொல்லாமல் அட்டாக் செய்கிறார்கள். மீதேன் வாயு பிரச்சனை பேசப்படுகிறது.
 
இது எல்லாம் என்ன எனப் புரியாமல் பார்த்தால், படம் மிக நன்றாக இருக்கிறது எனத் தான் சொல்லவேண்டும். பாடல்கள் இனிமை. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் நன்றாக உள்ளது. சமந்தா வழக்கமான தமிழ்த் திரைப்பட நாயகிகள் செய்யும் ரோலைக் குறைவின்றிச் செய்கிறார். ரொமான்ஸ் படம் இல்லை என்பதால் அவருக்கு அதிகக் காட்சிகள் இல்லை. படம் சற்று சீரியஸ் ஆகப் போகும் போது ஒரு பாடலைப் போட்டு, சற்று ஆசுவாசபடுத்துகிறார்கள். அதற்கு எனப் பைப்புக்குள் ஒரு ஊரே உட்கார்ந்து போராடுகையில் கூட, கனவுப் பாடல் வருவது சற்று ஓவர்தான் எனினும் பாடல் நன்றாக இருப்பதால் அதை மன்னித்துவிடலாம்.
 
தமிழ்ப் படங்களில் சென்னையில் எடுக்கப்பட்டாலும் சென்னையில் இருக்கும் நகரவாசிகள் எல்லாரும் ஏதோ சுயநலம் பிடித்தவர்கள், கிராமத்து மக்கள் செத்தாலும் கவலைப்படாமல் தம் பிழைப்பைப் பார்ப்பவர்கள் என்பது மாதிரி தீம்களில் பல படங்கள் வரும். நாயகர்கள் பஞ்சம் பிழைக்கச் சென்னை வருவார்கள். வந்து கிராமத்துப் பெருமையையும், சென்னையின் செயற்கைத் தன்மையையும் உணர்ந்து "சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு.. ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு" எனப் பாடி சென்னையில் உள்ள அல்ட்ரா மாடர்ன் பெண்ணைக் காதலித்து, சென்னையில் உள்ள படித்த, பணக்கார வில்லனை அடித்து உதைத்து, நீதியை நிலைநாட்டி, ஊர் திரும்புவார்கள். கத்தியிலும் அதே கதைதான். முன்பு வெள்ளையும், சொள்ளையுமா வில்லன்கள் படங்களில் வருவார்கள். இப்ப கோட்டும், சூட்டுமா வருகிறார்கள். சென்னை மகாஜனங்களும் தம்மை நன்றாகத் திட்டி எடுக்கப்படும் படங்களையும் பெருந்தன்மையாக ஓட வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம், கத்தியிலும் தொடர்கிறது.

 
கத்தி ஏதோ ஆல்டர்நேடிவ் யுனிவர்ஸில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த ஆல்டர்நேடிவ் உலகில் பன்னாட்டுக் கம்பனி முதலாளிகள் எல்லாரும் கூடி, வட்டமேஜை மாநாடு போடுகிறார்கள். மாநாடு போட்டு, கிராமத்து மக்களை அடக்க முடிவெடுக்கிறார்கள். பன்னாட்டுக் கொகோ கோலா கம்பனி முதலாளி, சினிமா ஹீரோ மாதிரி இளமையா இருக்கிறார். தன்னூத்து கிராமத்துக்கு அவரே வந்து பாக்டரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். விஜயுடன் அவரே கிளைமாக்ஸில் சண்டை போடுகிறார். கொக்கோகோலா கம்பனி முதலாளிக்கு இந்த அளவு பிஸிகல் பிட்னஸ் இருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்தான்.
 
சென்னைக்குச் செல்லும் நீரை மூன்று நாட்கள் தடுத்து நிறுத்திவிட்டு, ஊரையே பரபரப்பாக்கிப் பேட்டி கொடுத்துவிட்டு அடுத்த காட்சியில் விஜயும் நண்பர்களும் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். போலிஸ் பேருக்குக் கூட கைது செய்து, போலிஸ் வேனில் ஏற்றுவதாகக் காணோம். நீதிமன்றத்தில் இளைஞர்கள் வேலை வேண்டும் எனப் பெட்டிசன் போட்டால், பன்னாட்டுக் கம்பனிக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்லுவதாகச் சொல்கிறார்கள். விவசாயிகள் நிலம் வேண்டும் எனப் பெட்டிசன் போட்டால் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருகிறது. கொகோ கோலா கம்பனி விவசாயியின் நிலத்தைப் பிடுங்கினால், பத்திரத்தை வைத்து வழக்கு நடக்குமா? இல்லை இளைஞர் பெட்டிசன், விவசாயிகள் பெட்டிசனை வைத்து வழக்கு நடக்குமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 
விஜய் படம் என எடுத்துக்கொண்டால் கத்தி சிறப்பாக இருக்கிறது. விஜய் படங்களில் வரும் அனைத்து பார்முலாக்களும் இதில் உள்ளன. புத்திசாலித்தனமாக திட்டம் போட்டு வில்லனின் ஒவ்வொரு மூவையும் விஜய் முறியடிக்கிறார். ஆனால் படத்தைப் பார்த்தால் அவர் அரசியலுக்கு வந்தாலும் வந்துவிடுவார் எனத் தோன்றுகிறது. விஜயகாந்தே வந்துவிட்டார், விஜய் வந்தால் என்ன எனக் கேட்கிறீர்களா? இளைஞர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருவது நல்லதுதானே?
 
இந்தப் படத்துக்கு நமது மதிப்பெண் 2.5 / 5.

கத்தி படத்தை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்