வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (16:52 IST)

கணிதன் - விமர்சனம்

சமூகத்தில் சாமனிய மக்கள் எப்படி பித்தலாட்ட கும்பலால் ஏமாற்றப்படுகிறார்கள், அதிலும் படித்த இளைஞர்கள் அவர்களை அறியாமல் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கணிதன் படத்தின் மூலம் சொல்லி இருக்கும் இயக்குநர் டி.என். சந்தோஷ் ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


 
 
போலி சான்றிதழ் மூலம் படித்த இளைஞர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய எதிர்காலம் எப்படி பாதிப்படைகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பிபிசி-இல் பத்திரிக்கையாளராக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் நாயகன் அதர்வா கைதைக்கு ஏற்ற தேர்வு. தன்னுடைய நடிப்பால் அதர்வா அனைவரையும் கட்டி போட்டிருக்கிறார்.
 
நாயகியாக வரும் கேத்ரின் தெரெசா அழகிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார். முகம் சுழிக்க வைக்காத ரசிக்க கூடிய கவர்ச்சி நாயகியாக வலம் வரும் நாயகியாக உள்ளார்.  அதர்வாவின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார். இப்ப புரிகிறதா அதர்வா ஏன் பிபிசி-இல் பணி புரிய ஆசைப்படுகிறார் என்று. அவர் தந்தையும் ஆசைப்பட்டார் ஆனால் அவரால் முடியவில்லை, எனவே மகன் அதர்வா அதை சாதிக்க வேண்டும் என லட்சிய இளைஞனாக இருக்கிறார்.
 
தன்னுடைய லட்சியத்தை அடைய எப்படியோ பிபிசி நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று, பிபிசி போலிஸாரால் அவரது சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்படும் போது, அவரது சான்றிதழில் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றிய விவகாரம் தெரிய வருகிறது. தனது பிபிசி லட்சியம் நிறைவேறும் தருணத்தில் காவல் துறையினர் போலி சான்றிதழ் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியதாக அதர்வாவை கைது செய்கின்றனர்.
 
திடீரென கைது செய்யப்படும் அதர்வா, தான் எதற்காக கைது செய்யப்படுகிறேன் என்பதை அறிந்து, இந்த தவறை யார் செய்தார்கள் என்பது புரியாமல் இருக்கிறார். தன்னைப்போல போலி சான்றிதழால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக வருந்தும் அதர்வா, பெயிலில் வெளியே வந்ததும் தன்னுடைய சான்றிதழில், போலி தயாரித்து வெளிநாட்டு வங்கிகளில் ஏமாற்றியது யார் என கண்டுபிடிக்க முயல்கிறார். அந்த கும்பல் யார் யாரை எல்லாம் ஏமாற்றி இருக்கிறது. அவர்களை அதர்வா கண்டுபிடிக்கிறாரா? மீண்டும் பிபிசி பணியில் அமர்கிறாரா? என்பதே மீதிக்கதை.


 
 
போலிசன்றிதழ் மாபியா வில்லனாக வரும் தருண் அரோரா கண்களாலே மிரட்டுகிறார். கதைக்கு எற்ற பொருத்தமான தேர்வு. அதர்வாவின் நண்பனாகவும். வக்கீலாகவும் வரும் கருணாகரன் தனது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தின் நகைச்சுவை ரோல் இவர் தான்.
 
படத்தின் ஒவ்வொரு காட்சியை அற்புதமாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் விறுவிறுப்பான திரைக்கதைக்கேற்ப ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கதைக்கேற்ப பயணித்திருக்கிறார். டிரம்ஸ் சிவமணியின் இசையில் யப்பா சப்பா பாடல் பிரமாதம்.
 
அதர்வா, கேத்ரின் தெரசா, ஆடுகளம் நரேன், தருண் அரோரா, கருணாகரன் என படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரையும் அற்புதமாக பயன்படுத்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ். போலி சான்றிதழ் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள். நம்மை அறியாமல் நமது சன்றிதழின் போலிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என இளைஞர் சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் இயக்குநர்.
 
டி.என். சந்தோஷின் விறுவிறுப்பான திரைக்கதை, அதர்வாவின் ஆக்ரோஷம் குறையாத நடிப்பு, கேத்ரின் தெரசா என்னும் அழகு புயல், மிரட்டல் வில்லன் அரோரா, அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு என படத்தில் இவர்களின் பங்களிப்பு கணிதனை டாப்பாக மாற்றி இருக்கிறது. மொத்தத்தில் கணிதன் கெட்டிக்காரன்.