வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2016 (12:11 IST)

கபாலி - திரைவிமர்சனம்

நெருப்புடா.... நெருங்குடா, பார்ப்போம்... நெருங்குனா, பொசுக்குற கூட்டம்.... கடந்த சில வாரங்களாக தமிழகமே உச்சரித்த வார்த்தை கபாலி, கபாலி, கபாலி. தமிழகம் என்ன இந்தியாவே உச்சரித்த வார்த்தை இது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் இன்று வளியாகி உள்ளது இந்த திரைப்படம்.


 
 
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என பார்ப்போம்.
 
மலேசியாவை கதைக்களமாக கொண்டு கபாலி திரைப்படம் உருவாகி உள்ளது. சென்னை, புதுச்சேரி, தாய்லாந்து என சில காட்சிகளும் படத்தில் உள்ளன. ரஜினி ஜெயிலில் இருந்து விடுதலையாவதை போல படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
இந்த படத்தில் ரஜினியை ஒரு தலித் தலைவராக காட்டியிருக்கிறார்கள். மலேசிய தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ரஜினி அவர்களின் தலைவராக உள்ளார். மலேசியாவில் உள்ள நாசர் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நினைக்க, எதிரிகள் அவரை கொலை செய்கின்றனர். இதனால் கபாலி உருவாகிறான்.
 
ஒரு கட்டத்தில் எதிரிகளை வெட்டி கொல்ல ஜெயிலுக்கு செல்கிறார் கபாலி. பின்னர் 25 வருடங்களுக்கு பின்னர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் எதிரிகள் எந்தவித சிக்கலும் இல்லாமல் வளர்ந்து விடுகிறார்கள்.
 
விடுதலையானதும் வில்லனின் அடியாட்களை கபாலி சென்று பார்ப்பது மாஸ். பின்னர் மகள், மனைவி என தேடி அலையும் கபாலி செண்டிமண்டில் கண் கலங்க வைக்கிறார். தந்தையை காப்பாற்ற நினைக்கும் மகள் தன்ஷிகா அசத்தல். ராதிகா ஆப்தே, ரித்விகா, கலையரசன், ஜான்விஜய், அட்டக்கத்தி தினேஷ், கிஷோர் ஆகியோர் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
 
படம் பார்க்கும் போது ரஜினியின் பல கெட்டப்புகள் கண் முன்னே வந்து செல்லும். காமெடிக்கு வாய்ப்பே கொடுக்காமல் படத்தை எடுத்திருக்கிறார் ரஞ்சித். மலேசியாவை தவிர சென்னை, புதுச்சேரி, தாய்லாந்துக்கு ரஜினி வரும் காட்சிகள் உள்ளன.
 
ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து என போகும் ரஜினியின் காட்சிகள் ஹோட்டல்களிலேயே முடிந்து விடுகிறது. பாடல் காட்சிகளில் ஆரவாரமில்லை. நெருப்படா பாடல் படத்தில் இடை இடையே வந்து உற்சாகப்படுத்தினாலும், அதனை முழுமையாக ரசிக்கும் வாய்ப்பு இல்லை.
 
ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். ஆனால் கிராமத்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்பது சந்தேகமே?. காரணம் படத்தில் நிறைய காட்சிகள் மலேசியா, கிளப், தாய்லாந்து பார்ட்டி என நகர்கிறது. நிறைய ஹை ஸ்பீட் ஷாட்கள் வைத்து ரஜினியின் ஸ்டைலை அருமையாக காட்டிருக்கிறார்கள்.
 
படத்தின் இரண்டாம் பாகத்தை நல்லா எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே பேசுவதை கேட்க முடிகிறது. ரஜினி ரஜினி ரஜினி என கூறி கொஞ்சம் திகட்டவும் வைக்கிறார்கள்.
 
மூன்று விதமான ரஜினியின் கெட்டப்புகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு சவால். படத்தில் வரும் சில வசனங்கள் மனதில் பதியும் வண்ணம் உள்ளன.
 
ரஜினியின் மாஸ் படமாக இது இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ரஜினி டானாக வரும் இந்த கதையில் இவ்வளவு செண்டிமெண்ட் வைத்தது படத்தின் மைனசாக பேசப்படுகிறது. பாடல்கள் வருவதும் தெரியவில்லை, முடிவதும் தெரிவதில்லை.
 
மொத்தத்தில் கபாலி அடக்கி வாசிச்சிருக்கலாம்.
 
ரேட்டிங்: 3/5