வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 30 மார்ச் 2015 (14:44 IST)

வலியவன் - விமர்சனம்

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கியிருக்கும் படம். முதல் படத்தில் அழகழகான இரு காதல்கள். முத்தாய்ப்பாக, வேகம் விவேகமில்லை என்ற நெத்தியடி மெசேஜ். 
 

 
முதல் படத்தின் அழகில் முக்கால்வாசியை தொலைத்து வந்தது, சரவணனின் இரண்டாவது படம், இவன் வேற மாதிரி. மூன்றாவது படம் வலியவன் எப்படி?
 
கொஞ்சம் அசமந்தான ஆள் ஜெய். அதாவது கொஞ்சம் பயந்த சுபாவம். அவரிடம் வந்து தடாலடியாக ஐ லவ் யூ சொல்கிறார் ஆண்ட்ரியா. முன்பின் தெரியாத ஆண்ட்ரியாவை தேடி கண்டுபிடித்து பொறுப்பாக ஜெய்யும் ஐ லவ் யூ சொல்கிறார். ஆனால், அதனை ஏற்க மறுக்கிறார் ஆண்ட்ரியா. ஏன்?
 
ஒலிம்பிக்ஸில் வெள்ளி வாங்கிய பாக்ஸரை காட்டி, அவனை நீ அடிக்கணும், அப்புறம் சொல்லு உன் ஐ லவ் யூவை என்கிறார். 
 
ஆண்ட்ரியா ஏன் பாக்ஸரை அடிக்க சொல்கிறார் என்ற கேள்விக்கு சரவணன் சொல்லியிருக்கும் காரணமும், அதனை சொல்லியிருக்கும் விதமும் நாலைந்து கொட்டாவிகளை வரவைக்கிறது. காமெடி என்ற பெயரில் அவர் வைத்திருக்கும் காட்சிகளும் அப்படியே. 
 
அழகம்பெருமாள், ஜெய்யின் அப்பா - மகன் பாசம் சென்டிமெண்ட் ஏரியாவில் சரியாக லாக் ஆகாமல் நொண்டியடிக்கிறது. கொஞ்சம் ஜாம் ஒட்டியதற்காக ஒரு பாக்ஸர் ஒரு பெரியவரை போட்டு புரட்டுவதெல்லாம் அதிகபடியான கற்பனை. 
 
ஆண்ட்ரியாவுக்கு ஆன்டியாகும் வயது. ஒளிப்பதிவாளரும், ஒப்பனை கலைஞரும் ஓரளவு மறைத்திருக்கிறார்கள். அந்த ஒத்தப் பாடலில் வயதையெல்லாம் மறக்க செய்து, அவரை ஹீரோயினாக்கியதற்கான நியாத்தை செய்திருக்கிறார்.
 
தனியறையில் போட்டு புரட்டியவனைதான் கிளைமாக்ஸில் பப்ளிக்காக ஜெய் அடிக்கிறார் எனும் போது கொஞ்சம் பெப் குறையத்தான் செய்கிறது. ஆனாலும், படத்தை காப்பாற்றுவது அந்த கடைசி இருபது நிமிடங்கள்தான். 
 
படத்தின் தலையாய பலவீனங்களில் ஒன்று திரைக்கதை என்றால் அடுத்தது இசை. டி.இமான் என்பதற்கான எந்தத் தடயமும் ட்யூனிலும் இல்லை, பின்னணி இசையிலும் இல்லை. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் சொந்தப் பிரச்சனை என்றால் வலுவிருக்காது என்று தேசப்பிரச்சனையை வலிந்து திணித்திருக்கிறார் சரவணன். குப்பை மேட்டில் கோழி பிறாண்டியது போன்ற திரைக்கதை வலியவனை ரொம்பவும் சிறியவனாக ஃபீல் பண்ண வைக்கிறது.