வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By சங்கரன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (11:49 IST)

இது என்ன மாயம்- விமர்சனம்

படத்தலைப்புக்கு ஏற்ப இயக்குநர் ஏ.எல்.விஜய் மாயம் செய்து ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்துள்ளார்.

ஆமாம். அப்படி என்ன மாயம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுதான் படத்தோட கதை.

நாடக குழுவை நடத்தி வரும் நம் கதாநாயகன் விக்ரம் பிரபு காலப்போக்கில் நாடகம் டல் அடிக்க இனிமேலும் இதை நம்பி பொழைப்பு நடத்த முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.
தொடர்ந்து அதே துறையை வைத்து நாம் ஏன் வேறு வழியில் சம்பாதிக்கக் கூடாது என்று யோசிக்கிறார். அதன்படி காதலில் சொதப்புபவர்களை அதேநேரம் உண்மையாக காதலிப்பவர்களை கண்டுபிடித்து அதில் தன் டிராமாவைப் புகுத்தி காதலில் வெற்றி பெற வைக்கிறார். கையில் கணிசமாக பணம்புரள உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் ஆன்லைன் தொடங்குகிறார்.

அப்போதுதான் அவர்களிடம் சந்தோஷ் என்ற பணக்கார  இளைஞன் தன் காதலி மாயாவை ( கீர்த்தி சுரேஷ்) எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டி வருகிறான். ஆனால் மாயாவோ நம்ம ஹீரோவோட முன்னாள் காதலி. சந்தர்ப்ப சூழலில் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. தற்போது காதலை சேர்த்து வைக்க முற்படும்போது பழைய காதல் துளிர் விடுகிறது. ஹீரோ காதல் வெற்றறி பெற்றதா என்பதை வெண்திரையில் காண்க.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விக்ரம்பிரபு கில்லாடி. அதனால்தான் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கிறார். நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. அவரது கூர்மையான மூக்கைப் போல அறிவிலும் கூர்மையாக மிளிர்கிறார். புன்சிரிப்பு நாயகன் என்ற பட்டம் கொடுக்கலாம். அப்படி ஒரு மாய சிரிப்பை தனக்கே உரிய ஸ்டைலாக்கிக் கொண்டார்.

அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். நாயகனுக்கு ஈடாக கன்னம் குழி விழ இவர் சிரிக்கும் புன்சிரிப்பில் ரசிகர்களை கவர்ந்து அவர்களது கவலைகளை மாயம் செய்கிறார்.இனி இவர் முன்னணி நாயகிகளுக்கு சரியான போட்டி தான். நாயகனின் அப்பாவாக வருகிறார் நாசர். நண்பர்களாக வரும் ஆர்.ஜே., பாலாஜி வேணுகோபால் தரமான டைமிங் காமெடிகள். சார்லி காமெடி சூப்பர்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு மனதை மயக்குகிறது. இசையில் தீராத ஆசைகள் என்ற மெலடி பாடல் சொக்க வைக்கிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல நாடகமாடி காதலை சேர்த்து வைக்கும் நாயகனுக்கும் நாடகமாடியே காதலை சேர்த்து வைத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் வெற்றி ரகசியம். போரடிக்காமல் திரைக்கதையை லாவகமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இது என்ன மாயம் காதல் போதை.