வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (15:46 IST)

இருமுகன் - திரைவிமர்சனம்

இருமுகன் - திரைவிமர்சனம்

அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கரின் அடுத்த படைப்பு தான் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து இன்று வெளியான இருமுகன் திரைப்படம். இருமுகன் பர்ஸ்ட் லுக் வெளியிட்டதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.


 
 
குறிப்பிட்டு சொல்ல முடியாத வெற்றிகளை தராமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விக்ரமுக்கு இந்த படம் சிறந்த கம் பேக்-ஆக அமைந்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பது படம் மீதான நம்பிக்கையை அதிகரித்திருந்தது.
 
சயின்ஸ் ஃபிக்‌ஷனை மையமாக கொண்ட இந்த படம் மலேசியா, டெல்லி, காஷ்மீர், புக்கெட் என பல இடங்களில் நகர்கிறது. மலேசியாவில் உள்ள இந்தியன் எம்பஸியை ஒருவர் தாக்குகிறார். ஒரு கெமிக்கலை எடுத்துக்கொண்டதால் அவர் தனி ஆளாக எம்பஸியை தாக்குகிறார். இந்த கேஸை விசாரிக்க ரா அதிகாரியாக இருக்கும் விக்ரம் நியமிக்கப்படுகிறார்.
 
இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விக்ரம் படம் முழுவதும் பயணிக்கிறார். ரா அதிகாரியாக அகிலன் கதாபாத்திரத்தில் ஒரு விக்ரமும், அந்த கெமிக்கலை தயாரிக்கும் லவ் என்னும் கதாபாத்திரமாக ஒரு விக்ரமும் நடித்துள்ளார்.
 
இரு கதாபாத்திரத்திற்கும் விக்ரம் நல்ல வித்தியாசம் காட்டுகிறார். குறிப்பாக லவ் கதாபாத்திரத்தி விக்ரமுடைய பங்களிப்பு சிறப்பாக உள்ளது. பின்னர் தான் தெரிய வருகிறது அந்த கெமிக்கலை தயாரிப்பதும், தன்னுடைய மனைவியை கொன்றதும் அந்த லவ் தான் என்று.
 
யார் இந்த லவ், லவ்வின் சதிதிட்டத்தை விக்ரம் எப்படி முறியடிக்கிறார் என படத்தை பரபரப்பான திரைக்கதையுடன் நகர்த்துகிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். அடுத்தது என்ன?, அடுத்தது என்ன என படம் விருவிருப்புடன் செல்கிறது. படத்தின் விருவிருப்புக்காக ஒரு சில இடங்களில் லாஜிக்குகள் மீறப்படுகிறது.
 
நயான்தாராவின் கதாப்பாத்திரம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விக்ரம் மற்றும் நயன்தாரா இடையே ஒரு உள்ள காதல் காட்சிகள் அழகாக உள்ளன. கெஸ்ட் ரோலில் வரும் நித்யா மேனன் மற்றும் விக்ரம் இடையேயும் ஒரு மென்மையான காதல் வெளிப்படுகிறது.
 
பாடல்களில் ஹிட்டடிக்காத ஹாரிஷ் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். ராஜசேகரின் ஒளிப்பதிவு உலகத் தரத்தில் உள்ளது. லவ் கதாப்பாத்திரத்தை உருவாக்கிய விதமும் அதில் உள்ள சேட்டைகளும் படத்திற்கு பலமாக உள்ளது. ஒரு சில இடங்களில் லாஜிக் மீறப்படுவது மைனசாக பார்க்கப்படுகிறது. நித்யா மேனனை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
 
முதல் பாதியை விட இரண்டாம் பாதியை சற்று வேகமாக எடுத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. பல நாட்களுக்கு பின்னர் அன்னியன் போன்ற வித்தியாசமான வேடங்களில் நடித்து வெற்றியை ருசித்திருக்கிறார் விக்ரம்.
 
மொத்தத்தில் இருமுகன் “முழுமுகன்”
 
ரேட்டிங்: 3.5/5