வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2016 (18:43 IST)

இறைவி - திரைவிமர்சனம்

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தந்த கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படைப்புதான் இறைவி. கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உடன் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். நட்சத்திர பட்டாளமும், கர்த்திக் சுப்புராஜும் இணைய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு படப்பிடிப்பு தொடங்கியது முதலே இருந்து வந்தது.


 
 
பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. பெண்களின் வலி, இன்பம், துன்பம் போன்றவற்றை அருமையாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆணாதிக்க சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டையடி தான் இந்த இறைவி.
 
படத்தில் பல முக்கிய கதாபாத்திரம் வந்திருந்தாலும் படத்தின் கருவான கதாபாத்திரமாக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகனாக தன்னை நிரூபித்து காட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பல விதமான மனநிலமையை தாங்கிய இந்த கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் பல ஆஸ்கர் விருதுகளை இந்த படத்தின் மூலம் வென்றிருக்கிறார்.
 
தன் படம் வெளியாகாத விரக்தியில் குடிகாரனாகிய எஸ்.ஜே.சூர்யா, அவர் மீதான முரட்டு விசுவாசத்தால் விஜய்சேதுபதி அவசரத்திலும் கோபத்திலும் செய்யும் செயல்கள் இவர்களின் மனைவிகளை ரொம்பவே பாதிக்கின்றன. இந்த பாதிப்புகளிலிருந்து அவர்களின் மனைவிகளான கமாலினி முகர்ஜி, அஞ்சலி ஆகியோர் மீண்டார்களா அல்லது எல்லா பெண்களையும் போல் கணவனுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தார்களா என்பதே இறைவி படத்தின் கதை.
 
இந்த படத்தில் இருக்கும் மேலும் இரண்டு முக்கிய கதாபாத்திரம் பாபி சிம்ஹா, பூஜா. எஸ்.ஜே.சூர்யாவின் தம்பியான பாபி சிம்ஹா கலைக்கல்லூரி மாணவனாக வருகிறார். படத்தின் கிளைமேக்ஸில் முக்கிய திருப்பமாக இருக்கிறார் பாபி சிம்ஹா. இந்த படத்தில் பெண்களின் குரலாக இருக்கிறார் பாபி சிம்ஹா.
 
பூஜா கதாபாத்திரம் இந்த படத்தில் மிகவும் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. விபச்சாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதும், அந்த கதாபாத்திரத்துக்கு உயிரோட்டமான நடிப்பை கொடுத்திருப்பதும் சபாஷ். இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் கையாண்ட விதம் அப்ளாஸ்.
 
பெண் விடுதலையையும், ஆணாதிக்கத்தையும் சொல்லியிருக்கும் இந்த படம் ஆண்களின் பாராட்டை பெற்றிருப்பது தான் இயக்குனரின் வெற்றி. வசனங்களால் ஆண்களை தலை குனிய வைத்தாலும் படத்தின் முடிவில் ஆண்களின் கைதட்டல்களை வாக்கியிருக்கிறார் இயக்குனர்.
 
சந்தோஷ் நாராயணன் பட்டத்தின் கதைக்கு உயிரோட்டமாக இசை அமைத்திருக்கிறார். சில பாடல்கள் சற்று போரடித்தாலும், பின்னணி இசையில் படத்துக்கு உயிர் அளித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயனை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.
 
படத்தின் முதல் கதாநாயகன் கார்த்திக் சுப்பாராஜ் தான். இத்தனை பிரபலங்களை கையாண்டாலும் எந்த இடத்திலும் சிறு குறையில்லாமல் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். பெற்றெடுத்ததை விட அந்த பெண் குழந்தையை நல்ல முறையில் கரை சேர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் இறைவி “சாட்டையடி”
 
ரேட்டிங்: 3.5/5