வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 27 மே 2016 (17:05 IST)

இது நம்ம ஆளு - திரை விமர்சனம்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் இது நம்ம ஆளு. கன்னித்தீவு கதை போல் இழுத்தடித்து வந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக இன்று திரைக்கு வந்தது. சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


 
 
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என பார்க்கலாம்.
 
ஐடி கம்பெணியில் வேலை பார்க்கும் சிம்பு, அவருடன் படம் முழுவதும் பயணிக்கும் சூரி, சிம்புவை திருமணம் செய்துகொள்ள பெற்றோர்களாக நிச்சயக்கப்பட்ட பெண்ணாக நயன்தாரா என படம் சிறப்பான திரைக்கதையுடன் நகர்கிறது.
 
பெண் பார்க்க வந்த போதே சிம்புவின் முன்னாள் காதல் விவகாரம் தெரிந்து விடுகிறது நயன்தாராவுக்கு. இருந்தாலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் இருவரும் போனில் காதலர்களாக வாழும் காட்சிகள் காதல் செய்யாத இளைஞர்களை கூட காதல் செய்ய தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
போனில் சிம்புவும், நயன்தாராவும் பேசும் போது சூரி இடையில் கொடுக்கும் கவுண்டர்கள் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கடிக்கிறது. இருவரின் முன்னாள் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்சணை வருகிறது. சின்ன சின்ன சண்டை, கொஞ்சல்கள், கெஞ்சல்கள் என மீண்டும் இருவரும் சேரும் போது, சிம்புவின் பெற்றோருக்கும், நயன்தாராவின் பெற்றோருக்கும் இடையே பிரச்சணை வந்து திருமணம் நின்றுவிடுகிறது.
 
இறுதியில் இவர்கள் திருமணம் நடைபெற்றதா?, எப்படி நடைபெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படத்தில் சிம்பு, நயன்தாரா காதலர்களாக வாழ்ந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிம்புவின் வழக்கமான படங்களில் இருக்கும் தெனாவெட்டு, பிரமாதமான நடிப்பு என இதில் எதுவும் இல்லை. நார்மலாக கதைக்கு ஏற்றது போல் நடித்திருக்கிறார்.
 
நயன்தாரா திரையில் தோன்றும் போது அவ்வளவு அழகாக வருகிறார். படம் பார்க்கும் போது ரசிகர்கள் சிம்புவோடு சேர்ந்து தாங்களும் நயன்தாராவை காதலிப்பது போல் உணர்வார்கள். அந்த அளவுக்கு நயன்தாரா படத்தில் கவர்ந்து இழுக்கிறார்.
 
பிளாஷ்பேக்கில் வரும் ஆண்ட்ரியா அழகாக வந்து தனக்கு உரிய நடிப்பில் அசத்தி இருக்கிறார். கெஸ்ட் ரோலில் வரும் சந்தானம் கொஞ்ச நேரம் வந்தாலும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்.
 
சிம்பு, நயன்தாரா காதல் போரடிக்காமல் இருக்க கூடவே இலவச இணைப்பாக, சிரிப்பு ஊறுகாயாக படம் முழுக்க வருகிறார் சூரி. சூரிக்கு இந்த படம் நல்ல ஒரு எதிர் காலத்தை உருவாக்கி கொடுக்கும்.
 
தோல்விகளால் துவண்டு இருந்த சிம்புவுக்கு இது ஒரு சிறந்த கம்பேக். இயக்குனர் பாண்டிராஜ் படத்தை அழகாக செதுக்கியிருக்கிறார். சின்ன பசங்களை வைத்து படம் எடுத்த பாண்டிராஜ், இந்த படத்தில் இளைஞர்களை வைத்தும் தனக்கு படம் எடுக்க தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
 
படத்தில் வரும் வசனங்களில் இயக்குனர் தன் பலத்தை காட்டுகிறார். காதல் வழியும் கதை, வசனங்கள், சிம்பு, நயன்தாரா ஜோடி பொருத்தம், இருவருக்குமிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி, ஒளிப்பதிவு போன்றவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
 
மொத்தத்தில் இது நம்ம ஆளு காதலர்களுக்கு கொண்டாட்டம்.
 
ரேட்டிங்: 3.5/5