வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:13 IST)

ஹலோ நான் பேய் பேசுறேன் - விமர்சனம்

அறிமுக இயக்குனர் பாஸ்கரின் இயக்கத்தில் வைபவ் ரெட்டி, ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், விடிவி கணேஷ், கருணாகரன் நடித்த ஹலோ நான் பேய் பேசுகிறேன் திரைப்படத்தை சுந்தர் சி தாயரித்திருக்கிறார்.


 
 
புதுமுக இயக்குனர் என்றாலும் சுந்தர் சி தயாரிப்பு என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. வழக்கமான பேய் படங்களில் பேய் இருட்டில் வெள்ளை அல்லது கருப்பு உருவத்தில் இருக்கும். சில பேய் கோரமான உருவத்துடன் இருக்கும் திடீர் திடீர் என திரையில் தோன்றும். ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக ஸ்மார்ட் போனில்  பேய் வருகிறது.
 
திருடனான வைபவ், தான் திருடிய மொபைல் மூலம் பேயிடம் மாட்டிக்கொள்கிறார். அவர் மாட்டுவதுமல்லாமல் அவரது வருங்கால மச்சான்களான விடிவி கணேஷ் மற்றும் சிங்கப்பூர் தீபனும் இந்த மொபைல் பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கடைசியில் அந்த பேயிடம் இருந்து இவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதே மீதி கதை.
 
வைபவ் காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. படத்தில் பேயாக வரும் ஓவியாவே அதிகமாக வரவில்லை. முழுக்க முழுக்க காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பாஸ்கர். காமெடி வசனங்கள் மற்றும் விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் ஆகியோரின் டைமிங் காமெடி வசனங்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. படத்திற்கு பலமாகவும் இந்த டைமிங் வசனங்கள் உள்ளன.
 
திரைக்கதையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியையே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் பேய் கதாப்பாத்திரத்துக்கும் பேய் படத்துக்கான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாகவே வந்திருக்கும்.
 
ஒளிப்பதிவு செய்த பானுமுருகன், படத்தொகுப்பு செய்த ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் பணிகளை செவ்வனே செய்திருக்கிறார்கள். பல காமெடி நடிகர்களை படத்தில் பயன்படுத்தியது காரணமில்லாமலும், சுவாரஸியம் இல்லாமல் இருக்கிறது. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பேய் படம் என்கின்ற உணர்வை ரசிகர்களுக்கு தரவில்லை. கதை, திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸியம் சேர்த்து, லாஜிக் விஷயங்களை சரியாக கையாண்டிருந்தால் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ ‘நன்றாகவே பேசியிருக்கும்’.