வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:16 IST)

அசுரன் திரைவிமர்சனம்

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய வெற்றி படங்களுக்கு பின் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழு அளவில் இந்த கூட்டணி நிறைவு செய்திருப்பது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம் ஆகும்

இளம் வயதில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த தனுஷ், தனது குடும்பத்தை கொலை செய்தவர்களை கூண்டோடு கொலை செய்துவிட்டு பசுபதியிடம் தஞ்சம் அடைகிறார். அவரது தங்கை மஞ்சுவாரியரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் தனுஷின் வாழ்க்கையில் திடீரென ஆடுகளம் நரேனால் பிரச்சனை வருகிறது. தனுஷின் நிலத்தை தனக்கு விற்றே ஆகவேண்டும் என்று ஆடுகளம் நரேன் வற்புறுத்த தனுஷ் அதற்கு முடியாது என்று சொல்ல இரு பக்கமும் கொலைகள் விழுகின்றன. இந்த கொலைகளை அடுத்து தனது குடும்பத்தை தனுஷ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை

ஒரு நடிகர் 20 வயது இளைஞனாகவும், 50 வயது தோற்றத்திலும் எப்படி இப்படி நடிக்க முடிகிறது? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளது தனுஷின் நடிப்பு. நிச்சயம் தனுஷுக்கு இந்த படத்திற்காக ஒரு விருது கிடைக்கும். முதல் பாதியில் அமைதியின் சொரூபமாகவும் இடைவேளைக்கு பின் சீரும் சிங்கமாகவும் மாறும் தனுஷ், குடும்பத்திற்காக எடுக்கும் ரிஸ்குகள், தியாகங்கள் ஆகியவை ஒரு தந்தைக்கு உள்ள பொறுப்பு உணர்ச்சியை கண்முன் காட்டுகிறது

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியர், தமிழுக்கு முழுநேரமாக நடிக்க வந்தால் நிச்சயம் இன்றைய முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிவிடுவார். கேரக்டருக்கு அந்த அளவுக்கு மஞ்சுவாரியர் பொருந்தியுள்ளார் என்றால் அவரது நடிப்பு அபாரம்

அம்மு அபிராமி பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வந்தாலும் சூப்பர். ஆடுகளம் நரேன், பிரகாஷ்ராஜ், கருணாஸ் மகன் கென் உள்ளிட்டோர் நடிப்பும் சிறப்பு. பசுபதி வழக்கம்போல் பின்னி எடுத்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் சுமார் என்றாலும் ஓகே ரகம். வேல்ராஜ் கேமிரா, ராமர் படத்தொகுப்பு அருமை.

வெக்கை நாவலை படித்தவர்கள் இந்த படத்தில் எந்த அளவுக்கு அந்த நாவலை உயிரோட்டமாக இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கியுள்ளார் என்பது புரியும். தனுஷூக்கு வசனம் மிகவும் குறைவு என்றாலும் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. குறிப்பாக ’நாம எல்லோரும் ஒரே மொழி பேசுறோம், ஒரே நாட்டில் வாழுறோம், ஒண்ணா இருக்க முடியாதா? என்ற வசனமும், ’நம்மகிட்ட இருக்குற சொத்தை பறித்து விடலாம், நிலத்தை பறிக்கலாம், பணத்தை பறிக்கலாம் ஆனால் படிப்பை யாராலும் பறிக்க முடியாது. நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி, அவங்க செஞ்ச தப்பை செய்யாதே’ என்ற வசனமும் சூப்பர்

மொத்தத்தில் தனுஷின் வெற்றிப்பட பட்டியலில் இந்த அசுரன் நிச்சயம் சேரும்.

ரேட்டிங்: 3.5/5