வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : திங்கள், 15 செப்டம்பர் 2014 (12:12 IST)

பர்மா - திரை விமர்சனம்

கடனுக்குக் கார் வாங்கிவிட்டு, தவணை கட்டாதவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யும் குழு, ஒரு காரால் சிக்கலில் மாட்டுவது தான் கதை. 
 
காருக்குக் கடன் கொடுக்கும் கோத்ரா சேட்டு (அதுல் குல்கர்னி). இவர் சொல்லும் கார்களைச் சீசிங் செய்து வருபவர் குணா (சம்பத்). குணாவின் உதவியாளர்கள் பரமானந்தம் என்ற பர்மா (மைக்கேல்), பூமர் (கார்த்திக் சபேஸ்).
 
யாருடைய, எத்தகைய காராக இருந்தாலும் கில்லியாகப் போய், அவருக்கே தெரியாமல் கிளப்பி வருவதில் குணா மன்னன். ஆனால், அவர் தன் உதவியாளர்களுக்கான பர்மாவுக்கும் பூமருக்கும் நூறு, இருநூறு எனக் கொடுக்க, "அதிகம் காசைக் கண்ணில் காட்டக் கூடாது. அப்போதான் அவங்க நம்ம காலைச் சுத்தி நாய் மாதிரி சுத்தி வருவாங்க" எனச் சொல்கிறார். உடனே அவரை ஒரு பொய் வழக்கில் பர்மா மாட்டிவிட, குணாவுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை.
 
இதற்கிடையில், பர்மாவுக்கும் கல்பனாவுக்கும் (ரேஷ்மி மேனன்) காதல். இந்த விஷயம், கல்பனாவின் பெற்றோருக்குத் தெரிய வரவே, அவர்கள் கல்பனாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கின்றனர். அவரும் வெளியே வந்து, பர்மாவுடனேயே தங்குகிறார்.
 
குணா இல்லாத ஒரு வருடத்தில், சேட்டிடமிருந்து நேரடியாக வேலையைப் பெற்று, பர்மாவும் பூமரும் செய்கிறார்கள். அப்போது ஒருநாள், 28 கார்களைப் பறிமுதல் செய்யும் பணியைக் கொடுக்கிறார் சேட். அந்த வேலையில் பர்மா, பூமருடன் கல்பனாவும் இணைந்துகொள்கிறார். இதற்கிடையில், சிறையில் இருந்து வெளியே வந்த குணா, பர்மாவைப் பழிதீர்க்கக் காத்திருக்கிறார்.
 
27 கார்களைப் பறிமுதல் செய்த நிலையில், 28ஆவது கார், வெளிநாட்டு இறக்குமதியான பிஎம்டபிள்யூ கார். அந்தக் காரைப் பறிமுதல் செய்து திரும்பும் வழியில் எதிர்பாராத திருப்பங்களுடன் அந்தக் காரை இவர்களிடமிருந்து யாரோ தட்டிச் சென்றுவிடுகிறார்கள். "அந்தக் காரைக் கொண்டு வரும் வரை இவளை விட மாட்டேன்" எனக் கல்பனாவைச் சேட் சிறை வைக்கிறார். பிஎம்டபிள்யூ காரைத் தட்டிச் சென்றவர்கள் யார்? ஏன்? பர்மா அதை மீட்டாரா? குணா, பர்மாவைப் பழி தீர்த்தாரா? என்பதுதான் மீதிக் கதை. 
 
மேலும்

பர்மாவாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரைக்குச் சாந்தமான முகவெட்டு, வலுவான உடற்கட்டு. இளம் வயதுக்கு ஏற்ப, இன்னும் கொஞ்சம் துருதுருப்பாக நடித்திருக்கலாம். எல்லாக் காட்சிகளிலும் நிதானமாக இருக்கிறார். இவர் கார் பறிமுதல் செய்வதைப் பார்க்கும்போது, கார் திருடுவது போலவே இருக்கிறது. 
 
கார் வாங்கியவருக்குத் தெரியாமல் காரை எடுத்து வந்து, கடன் கொடுத்த சேட்டிடம் விடுவது, வாங்கியவருக்கு எப்படித் தெரியும்? 'பணத்தைக் கட்டிவிட்டு, காரை மீட்டுக்கொள்' எனத் தொலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ, துண்டுச் சீட்டிலோ கூடச் சொல்லக் காணோம். கார் காணவில்லை என்றால் அதைச் சேட்டு தான் ஆளை வைத்து எடுத்துச் சென்றிருப்பார் என வாங்கியவர்கள் யூகித்துக்கொள்ள வேண்டுமா? இதைப் பயன்படுத்தி, வேறு யாராவது காரைத் திருடிச் செல்ல முடியாதா? இதற்காக கார் வாங்கியவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன்? இப்படிச் சில கேள்விகள் எழுகின்றன.
 
புத்திசாலியான பர்மாவுக்குப் பண விஷயத்தில் குணா தன்னை ஏமாற்றுவது, இன்னொருவர் சொல்லித்தான் புரிகிறது. 28ஆவது காரின் சாவியை எடுக்க, ரொம்ப நேரம் பர்மா மெனக்கெடுகிறார். 27 கார்களையும் ஒரிஜினல் சாவி இல்லாமல் எடுக்க முடிந்த இவரால் இந்தக் காருக்கு மாற்றுச் சாவி ஏன் தயாரிக்க முடியவில்லை? அதற்கான காரணம், படத்தில் இல்லை. மேலும், காரைப் பறிமுதல் செய்ததும், அதை நேராகச் சேட்டிடம் ஓட்டிச் செல்லாமல், மீண்டும் மீண்டும் அவருக்குப் போன் போட்டுக்கொண்டிருப்பது ஏன்? காரைத் தொலைத்துவிட்டு, சேட்டிடம் அடி வாங்குவது, அவரது திறமகை்கு இழுக்கு. 28ஆவது காரின் டிக்கியில் பணம் இருப்பது குறித்தும் பர்மாவுக்குத் தெரியவில்லை. பூமர் தான் அதையும் அரிய கலைப்பொருளான ஈஸ்டர் முட்டையையும் கண்டுபிடிக்கிறார். இவை, பர்மாவின் ஹீரோ இமேஜைக் குறைக்கின்றன. 

 
கதாநாயகி கல்பனாவாக ரேஷ்மி, கவர்கிறார். பர்மாவின் கால் மீது ஏறி, அவர் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுக்கையில், பூமர் ஒரு குளிர்பானத்தில் குழலைப் போட்டு உறிஞ்சுவது, இயக்குநரின் சுவையான குறியீடு. ஆனால், கல்பனாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னதும் ஜாலியாக வந்துவிட்டார். காதலர் வீட்டில் வந்து தங்கிவிட்டார். அவருடன் கார் பறிமுதல் செய்ய வேறு செல்கிறார். பெற்றோரை விட்டுச் செல்வது குறித்தோ, காதலர் நிலையான பணியில் இல்லாதது குறித்தோ அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. இது, ஒரு குழப்பமான பாத்திரப் படைப்பு. கல்பனாவின் அப்பாவும் அம்மாவும் பர்மாவை ஏற்றுக்கொள்வதற்கும் வலுவான காரணம் இல்லை.
 
பார்வையாலேயே மிரட்டும் சேட்டாக அதுல் குல்கர்னி, சிறப்பாக நடித்திருக்கிறார். குணாவாக வரும் சம்பத், ஒரு குத்துப் பாட்டுக்கு ஜிலுஜிலு சட்டையில் வெளிநாட்டுச் சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்டிருக்கிறார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது, அதில் எச்சரிக்கை வாசகம் வைப்பதன் மூலம், பார்வையாளர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என அரசு நம்புகிறது. ஆனால், இத்தகைய காட்சிகள் அதிகரித்து வருவதும் இந்த எச்சரிக்கை வாசகங்கள் ஒப்புக்கு இடம் பெறுவதும் தான் நிகழ்கின்றன. அதுவும் குடித்துவிட்டுக் குத்தாட்டம் போடும்போது, அந்தக் காட்சியில் மறைமுகமாக, குடித்தால் இப்படி குத்தாட்டம் போடலாம் என்ற குறிப்பு இருப்பதைத் தணிக்கைத் துறையினர் கவனிக்க வேண்டும்.
 
இயக்குநர் தரணிதரன், புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததே போதும் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது. படத்தை விறுவிறுப்பாக நகர்த்தும் வகையில் திரைக் கதையை அமைக்கவும் பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களின் உடல் மொழியை வெளிப்படுத்தவும் தவறியிருக்கிறார். ஒரு கோடி மதிப்புள்ள ஈஸ்டர் முட்டையை விற்க வரும் பெண், இப்படியா பாதுகாப்பு இல்லாமல் வருவார்? 
 
யுவாவின் ஒளிப்பதிவும் சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையும் நன்று. படம் முடிந்த பிறகு, படக் குழுவினர் பெயர்களை இடும்போது, பொதுவாக யாரும் கவனிப்பதில்லை. அவர்களைக் கடைசி வரை உட்கார வைப்பதற்காக, இயக்குநர் கையாண்ட உத்தி சிறப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.
 
ஆனால், பரபரவென்று 5ஆவது கியரில் சென்றிருக்க வேண்டிய பர்மா, 2-3ஆவது கியரிலேயே செல்கிறது. என்றாலும் இது சுமாராக ஓடும் என எதிர்பார்க்கலாம்.