வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (20:05 IST)

பாகுபலி 2 - திரை விமர்சனம்!

இந்த பாகத்தில் பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான  ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்து, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கப்படுகிறது. இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக  பிரபாஸுடன் கட்டப்பா சத்யராஜையும் பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். 

 
பயணத்தின்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.  அதே நேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்கா வாள் வீச்சில் மட்டும் அல்லாமல் அவளது அழகிலும் சொக்கி  போன பிரபாஸ் காதலிக்கவும் செய்கிறார். 
 
அனுஷ்காவிடம் யார் என்பதை காட்டி கொள்ளாமல், கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருப்பதாகவும், பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி, ஒற்றன் மூலமாக அரண்மனையில்  இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அதில் இருக்கும் அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது  மயக்கம் கொள்கிறான்.
 
அனுஷ்காவை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின்  வீட்டுக்கு அனுப்பி வைக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு அனுஷ்காவால் அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்.

இதனால் கோபமடைந்த  ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன், அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை அறிந்து அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார். அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள்  புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட, பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு  குந்தலதேசமே வியந்து நிற்கும் வேலையில், அப்போதுதான் பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற  விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும்  கூறுகிறார். இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். 
 
தொடர்ந்து மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்க, அன்பு கட்டளை யால், அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று  பிரபாஸ் கொடுக்கும் வாக்கை ஏற்று, அனுஷ்கா அவருடன் செல்ல முடிவெடுக்கிறாள்.
 
ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிடம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த இருவர் வாக்குகளினால்  என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? யாருடைய வாக்கு நிறைவேற்றப்படுகிறது என்பதே மீதி கதை. படம் முழுக்க வைத்த  கண் வாங்காமல் பார்க்க வைக்கிறது. 
 
முதல் பாகத்தை நினைவுபடுத்துவதும் விதமாக முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது அருமை. பிரபாஸ் முந்தைய பாகத்தைவிட இந்த பாகத்தில் அவருடைய மிடுக்கான தோற்றம், நடிப்பு, மாஸ் காட்சிகளில் அவரின் நடிப்பு வியக்க வைக்கிறது.  இந்த படத்திற்காக அவர் 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றே தோன்றுகிறது. குந்தலதேசத்து மக்களிடம் பிரபாஸை மகிழ்மதியின் இளவரசன் என்று கட்டப்பா அறிமுகப்படுத்தும் காட்சிகள் பிரமாதம்.
 
அனுஷ்கா முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் அவருக்கு கூடுதல் காட்சிகளில் அழகிய அரசியாக வலம் வந்து  அனைவரையும் கவர்கிறார். வாள் சண்டையில் மட்டும் அல்ல, வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார். ராணாவின் பகைமை முதல் பாகத்தை விட இதில் முழு ஆக்ரோஷத்தையும் காட்டும் விதத்தில் நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணனின் ராஜமாதா கம்பீர நடிப்பு மற்றும் வசனங்களில் அனைவரையும் அசர  வைக்கிறார். தமன்னா தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாசர் இந்த பாகத்தில் ரொம்பவும் சாதுர்யமாக  காய் நகர்த்தும் சூத்ரதாரியாக பளிச்சிடுகிறார். கட்டப்பாவாக வரும் சத்யராஜ் விரப்பாக மட்டுமல்லாமல், தனக்கே உரித்தான  நக்கல், நையாண்டியிலும் கலக்கியிருக்கிறார். அவை எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது.
 
குறிப்பாக, நாம் எல்லோரும் எதிர்பார்த்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் காட்சியில் பிரமாதம். அப்படியே ரசிகர்களை கலங்கடித்திருக்கிறார்கள்.
 
எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை அப்பாடியோ... வியப்பை தருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம், டுவிஸ்டு  மேல் டுவிஸ்டு என கதையை நகர்த்திய விதம் படம் பார்ப்பவர்களை கட்டிபோடுகிறார். சரித்திர கதையிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களோடு மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதோடு, ரசிக்கும்படியாகவும் படத்தை கொடுத்திருப்பது  இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா?  என்பது சந்தேகம்தான். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக ராஜமௌலிக்கு எவ்வளவு பெரிய உயரிய விருது கொடுத்தாலும்  போதாது.
 
மதன் கார்க்கியின் வசனங்கள் மனதில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதியுமாறு செய்திருக்கிறார். மரகதமணியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. படமாக்கப்பட்டுள்ள விதம், பின்னணி இசை அருமை அபாரம். 
 
ஆக மொத்தத்தில் ‘பாகுபலி 2’  பிரமிப்பு,  அசத்தும் காவியம், அழியாத வரலாறு.