வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 6 மே 2016 (18:16 IST)

24 - திரைவிமர்சனம்

யாவரும் நலம், மனம் போன்ற படங்களை எடுத்த விக்ரம் கே குமாரின் அடுத்த படைப்பு தான் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 திரைப்படம். நீண்ட நாள் கத்திருப்பிற்கு பின் தமிழ் சினிமாவுக்கு புதிதான கதைக்களத்துடன் வந்திருக்கும் 24 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை 24 திரைப்படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.


 
 
சூர்யா இரட்டை வேடங்களில் பல படங்களில் நடித்தாலும் முதன் முறையாக மூன்று வேடத்தில் நடித்துள்ளார். வரிசையாக மொக்கை வாங்கிய சூர்யாவுக்கு 24 படம் சிறந்த பலனை கொடுத்திருக்கிறது.
 
இரட்டை பிறவிகளாக வரும் சூர்யா சகோதரர்களில் ஒருவருடைய பெயர் சேதுராமன், மற்றொருவர் ஆத்ரேயா. சேதுராமன் தனது ஆராய்ச்சிக்காக டைம் மெஷின் ஒன்றை கைக் கடிகாரமாக கண்டுபிடிக்கிறார். இந்த டைம் மிஷன் கைக் கடிகாரம் அணிந்திருப்பவர் கடந்த காலம், வருங்காலம் என சென்று தான் விரும்பும் நிகழ்வுகளை மாற்றி அமைக்கலாம். இந்த டைம் மெஷினை அடைய விரும்பும் அண்ணன் சூர்யா (ஆத்ரேயா) தனது தம்பி குடும்பத்தை கொலை செய்ய முயற்சிக்கிறான்.
 
ஆத்ரேயின் கொலை முயற்சியில் இருந்து சேதுராமனின் குழந்தை தப்பிக்கிறது. அந்த குழந்தை தான் மூன்றாவது சூர்யா. அவர் டைம் மிஷன் மூலம் கொலை செய்யப்பட்ட தனது பெற்றோர்களை மீட்டாரா? தனது பெற்றோரை கொலை செய்த பெரியப்பா ஆத்ரேயாவை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
விக்ரம் கே குமார் இந்த படத்தை தன்னுடைய அருமையான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார். வில்லனாக வரும் சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக வீல் சேரில் வரும் ஆத்ரேயாவின் நடிப்பு தரம். நாயகிகளான நித்யா மேனன் மற்றும் சமந்தாவின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படத்தில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.
 
ஏஆர் ரஹ்மானின் பின்னனி இசை படத்திற்கு ஏற்றவாறு பயணித்து வலு சேர்க்கிறது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவும், பிரவின் புடியின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது. ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என கலந்து கோடை விடுமுறைக்கு விருந்து வைத்திருக்கும் இயக்குனர் விக்ரம் கே குமார் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 2.45 மணி நேரம் படம் ஓடுகிறது. இரண்டாம் பாதியில் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிற அளவுக்கு டுவிஸ்ட்களுடன் நகர்கிறது படம்.
 
மொத்தத்தில் 24 திரைப்படம் 20-20 கிரிக்கெட் போட்டியை போல் போரடிக்காமல் பார்க்கலாம்.
 
ரேட்டிங்: 3.45/5