வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (07:35 IST)

இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை

இன்று முக்கியமான மூன்று நேரடிப் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் அது திரைத்துறைக்கு பூஸ்டாக அமையும்.
 
தனி ஒருவன்
 
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடித்துள்ள படம். மோகன் ராஜா யாருமில்லை. ஜெயம் படத்தை இயக்கி, சினிமாவில் அறிமுகமாகி நம்மால் ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டவர்தான். இந்தப் படத்திலிருந்து, தனது எல்லா வெற்றிகளுக்கும் காரணமான அப்பா எடிட்டர் மோகனின் பெயரை முதலில் வைத்து மோகன் ராஜாவாக மாறியிருக்கிறார்.
 

 
நயன்தாரா ஹீரோயின். படத்தில் இவருக்கு பவர்ஃபுல் வேடம். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கே நயன்தாராதான் வழிகாட்டுவார் என நயன்தாராவின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார் மோகன் ராஜா. கணேஷ் வெங்கட்ராமனுக்கு முக்கியமான வேடம்.
 
தனி ஒருவனின் சிறப்பு, தமிழின் ஹேண்ட்ஸம் ஹீரோவான அரவிந்த்சாமி இந்தப் படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். 
 
ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் அடிதடியுடன் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.

தாக்க தாக்க
 
காக்க காக்க மாதிரி தாக்க தாக்க. விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படமும் நாளை திரைக்கு வருகிறது. 
 
தனி ஒருவன் போல இதுவும் அண்ணன் தம்பி படம்தான். ஆம். அண்ணன் சஞ்சீவ் இயக்க, தம்பி விக்ராந்த் நடித்துள்ளார்.
 

 
விக்ராந்துக்கு விஜய்யின் முகவெட்டு இருந்தாலும், விஜய்யின் வெற்றி மட்டும் இன்னும் கைகூடவேயில்லை. அவர் தனி நாயகனாக நடித்தப் படங்களைவிட பாண்டிய நாடு படத்தின் நண்பன் வேடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அந்த தெம்பில் வருகிறது தாக்க தாக்க.
 
இந்தப் படத்துக்கு முதலில், பிறவி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். ஆக்ஷன் படத்துக்கு தண்ணியில நனைந்த கோழி மாதிரி ஒரு பெயரா என அனைவரும் கேட்க, தாக்க தாக்க என்று போர்ஷாக மாற்றியுள்ளனர்.
 
இந்தப் படத்தின் விசேஷம், அதன் பிரமோ பாடல். நட்சத்திர கிரிக்கெட் விக்ராந்தையும் மற்ற இளம் நடிகர்களையும் நெருங்கிய நண்பர்களாக்கியது. முக்கியமாக விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூவரும் விக்ராந்துடன் தாக்க தாக்க படத்தின் பிரமோ பாடலில் நடித்துள்ளனர். இது படத்துக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்தப் பாடலில் வரும் தாக்க தாக்க என்ற வரியைதான் பெயராக்கியுள்ளனர்.
 
விக்ராந்த் தனது திரையுலக வாழ்வுக்கு மிகவும் நம்பியிருக்கும் படம் இது.

அதிபர்
 
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஜீவன் ஒருநாள் காணாமல் போனார். சில வருடங்கள் தமிழ் சினிமாவில் அவர் தென்படவில்லை. அப்படி மாயமானவர் மறுபடியும் வந்திருக்கும் படம், அதிபர். படத்தை இயக்கியிருக்கும் சூரியபிரகாஷும் அப்படித்தான். மாயி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி காணாமல் போனவர்.
 

 
ரியல் எஸ்டேட்தான் களம். பெரும் பணம் உள்ள ஒருவனை சிலர் ஏமாற்றிவிடுகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது கதை. தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
த்ரில், ஆக்ஷன், காதல், பரபரப்பு அனைத்தும் கலந்து அதிபரை எடுத்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார். சென்டிமெண்ட் ஏரியாவில் சூரியபிரகாஷுக்கு எக்ஸ்ட்ரா பலம். அதிபரில் சென்டிமெண்ட் சிறப்பாக வொர்க் அவுட்டாகும் என்கிறார்கள்.
 
பாக்ஸ் ஆபிஸில் இந்த எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்குமா என்பது நாளை தெரியும்.
 
இந்த மூன்று படங்கள் தவிர, எப்போ சொல்லப்போற என்ற படமும் நாளை வெளியாகிறது.