1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By -ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 28 ஜூலை 2014 (16:57 IST)

த கிரேட் ட்ரெய்ன் ராபெரி (The Great Train Robbery)

திருட்டை மையப்படுத்திய கதைகளுக்கு இயல்பாகவே ஒரு சுவாரஸியம் கூடிவிடுகிறது. திருட்டை திட்டமிடுவது, அதனை செயல்படுத்துவது, திட்டத்தை மீறி அதனை செயல்படுத்தும் போது ஏற்படும் தடங்கல்கள், அதனை அந்தகண புத்தி சாதுரியத்தை வைத்து சமாளிப்பது என்று பார்வையாளர்களை பரவசப்படுத்துகிற அம்சங்கள் இவ்வகைப் படங்களுக்கு உண்டு.
இங்லாந்தின் சரித்திரத்தில் ஓடுகிற ரயிலில் நடத்தப்பட்ட முதல் தங்கக் கொள்ளை 1855 -ம் ஆண்டு நடந்தது. சரித்திரத்தில் கிரேட் கோல்ட் ராபெரி (Great Gold Robbery)  என்று அறியப்படும் இந்த திருட்டை மையப்படுத்தி இயக்குனர் மைக்கேல் கிரைட்டன் 1978 -ல் த கிரேட் ட்ரெய்ன் ராபெரி என்ற படத்தை எடுத்தார்.
 
1855 -ம் ஆண்டு இங்லாந்து கிரிமியன் போரில் (Crimean War)  ஈடுபட்டிருந்தது. போர் வீரர்களுக்கான சம்பளம் மாதம்தோறும் லண்டன் ஹட்லெஸ்ட் அண்ட் ப்ராட்ஃபோர்ட்(Huddlest And Bradford) வங்கியிலிருந்து தங்கக் கட்டிகளாக அனுப்பப்படும். இரண்டு பெட்டிகளில் வங்கியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் தங்கக் கட்டிகள் லண்டன் ப்ரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு  
folkestone செல்லும் ரயிலில் அனுப்பப்படும். அங்கிருந்து போர்முனைக்கு அவை எடுத்துச் செல்லப்படும். 
ரயிலில் தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதற்கென இரு பாதுகாப்பு பெட்டகங்கள் உண்டு. நான்கு சாவிகளால் அவை மூடப்பட்டு இரண்டு சாவிகள் ரயில்வே ஸ்டேஷனின் அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒரு சாவி வங்கியின் பிரசிடெண்ட் எட்கர் ட்ரென்டிடம் தரப்படும். நான்காவது வங்கியின் மேலாளர் ஹென்றி ஃபாவ்லரிடம் ஒப்படைக்கப்படும். இந்த நான்கு சாவிகள் இருந்தால் மட்டுமே பெட்டகங்களை திறக்க முடியும்.
 

சாவிகளை திருடினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்து விடும். எச்சரிக்கையடைவார்கள். சாவிகளின் மெழுகுப் பதிவுகளை வைத்து அந்த சாவிகளைப் போல் மாற்று சாவிகளை தயாரிக்க வேண்டும். 110 நிமிடங்கள் ஓடக் கூடிய படத்தில் முதல் அறுபது நிமிடங்கள் மெழுகுப் பதிவுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் எடுக்கிறார்கள் என்பது விலாவரியாக காட்டப்படுகிறது. இந்தத் திருட்டை திட்டமிடுவதும் நடத்துவதும் அன்றைய லண்டன் மேட்டுக்குடி கனவான்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த எட்வர்ட் பியர்ஸ். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது ஷான் கானரி (Sean Connery). தனக்குத் துணையாக பிக்பாக்கெட்டிலும், பூட்டுகளை திறப்பதிலும் நிபுணரான ராபர்ட் ஆகர் என்பவரையும் எட்கர் கூட்டு சேர்த்துக் கொள்கிறார். அவருக்கு உதவும் இன்னொருவர் எட்வர்டின் மனைவியாக நடிக்கும் Miriam என்ற நடிகை.
வங்கி பிரசிடென்ட் மற்றும் மேலாளரின் பாதுகாப்பில் இருக்கும் சாவிகளின் மெழுகுப் பதிவுகளை அதிக சிரமமின்றி எடுத்து விடுவகிறார்கள். ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருக்கும் சாவிகளை எடுப்பதுதான் சிரமமாகயிருக்கிறது. பகல் நேரத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிய இரவில் முயற்சி செய்கிறார்கள். 74 விநாடிகள் மட்டுமே ஸ்டேஷன் அறையை காவல் காக்கும் போலீஸ்காரர் வெளியே செல்கிறார். அந்த குறைந்த கால அவகாசத்தில் அறையை திறந்து சாவிகள் இருக்கும் சிறிய பாதுகாப்புப் பெட்டியையும் திறப்பது அசாத்தியம். அலுவலக அறையை யாரேனும் திறந்து தந்தால் எட்கரால் சாவியை எடுத்து அதன் மெழுகுப் பதிவை எடுக்க முடியும். 
 

அலுவலக அறையை திறப்பதற்கு சிறையில் இருக்கும், எந்த கட்டடத்திலும் சிலந்தியைப் போல் ஏறக்கூடிய க்ளீன் வில்லியின் உதவியை நாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பிக்கும் வில்லி கச்சிதமாக வேலையை செய்ய, நான்கு சாவிகளின் மாற்றுச் சாவிகள் தயாராகிவிடுகின்றன. அதேநேரம் க்ளீன் வில்லியை கைது செய்யும் அதிகாரிகள் திருட்டு குறித்து ஏகதேசமாக சில விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். ரயிலில் தங்கக் கட்டிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்றால் படம் நெடுக ஓடும் நகைச்சுவை. இரண்டாவது, ஓடும் ரயிலின் மீது ஷான் கானரி ஒவ்வொரு பெட்டியாக தாவிச் சென்று வெளிப்புறம் தாளிடப்பட்டிருக்கும் கோச்சின் பூட்டை திறந்து தங்கக் கட்டிகளை கைப்பற்றும் சாகஸம். இந்தக் காட்சிகளை ஓடும் ரயிலில் டூப் எதுவும் போடாமல் ஷான் கானரியே நடித்தார்.

இன்றும் இந்தக் காட்சிகள் பார்வையாளனுக்கு பரவசமூட்டும் வகையில் உள்ளன. காட்சியின் டெம்போவை கூட்டுவதற்காக கேமராவை ஆட்டுவது போன்ற எந்த செய்கையும் இதில் இல்லை. பாலங்களை ரயில் கடந்து செல்கையில் ரயிலின் மேற்கூரைக்கும் பாலத்திற்கும் இடையே ஒரு ஆள் படுப்பதற்கான இடமே உள்ளது. ஓடுகிற ரயிலின் மீது நடந்து கொண்டே பாலங்கள் எதிர்ப்படுகையில் சட்டென்று படுத்துக் கொள்ள வேண்டும். பலமுறை ஷான் கானரி பாலத்தில் அடிபடாமல் மயிரிழையில் தப்பியிருக்கிறார். 
ஒரு சாகஸப் படத்தில் எப்படி நகைச்சுவையை சேர்ப்பது என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். குறிப்பாக வங்கி பிரசிடென்டின் இளம் மனைவியும் ஷான் கானரியும் நட்டையும் போல்டையும் பற்றி பேசிக் கொள்ளும் இடம். இளம் மனைவியின் முகபாவமும், வசன உச்சரிப்பும் சாதாரண காட்சியை அசாதாரணமாக்கிவிடுகிறது. 
 

 Jerry Goldsmith  -ன் இசை படத்துக்கு ஒரு செவ்வியல் தன்மையை தருகிறது. குறிப்பாக ரயில் மீது ஷான் கானரி மேற்கொள்ளும் சாகஸ காட்சிகளில் இசையும் ஒளிப்பதிவும் நம்மை காட்சியோட ஒன்ற வைக்கின்றன. 
மைக்கேல் கிரைட்டன் இதே பெயரில் தான் எழுதிய நாவலைத்தான் படமாக்கினார். 1855 -ல் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து அவர் நாவலை எழுதினாலும் புனைவுக்கே அவர் அதிக முக்கியத்துவம் தந்திருந்தார். உண்மையில் தங்கத்தை திருடியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் படத்தில் ஷான் கானரி தப்பித்துச் செல்கிறார். அனைவரும் விரும்பக் கூடிய அழகான நகைச்சுவை மிகுந்த சாகஸக்காரராக அவரது கதாபாத்திரத்தை கிரைட்டன் உருவாக்கியிருந்தார்.
 
இன்றும் படம் பார்த்து ரசிப்பதற்கு காரணமாக இருப்பது இந்த புனைவுதான் என்றால் மிகையில்லை.