Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேராசை பிடித்த பெரியார் - வாலி சொல்லும் அனுபவம்

பேராசை பிடித்த பெரியார் - வாலி சொல்லும் அனுபவம்


ஜே.பி.ஆர்.| Last Modified புதன், 29 ஜூன் 2016 (10:43 IST)
ஆன்மீகவாதியாக இருந்தாலும், திராவிட கட்சிகளுடன் நெருக்கமான உறவை கடைசிவரை பேணி வந்தவர், மறைந்த காவிய கவிஞர் வாலி.

 


பெரியாருடனான அவரது சந்திப்பு குறித்து வாலி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவரது வார்த்தைகளிலேயே அதனை பார்ப்போம்.
 
"என் நண்பர் எம்.ஆர்.பாலு என்பவர், 'பேராசை பிடித்த பெரியார்' என்ற ஒரு சமூக நாடகத்தை எழுதி, அதில் என் சீடன் திருச்சி சௌந்தர்ராஜனை பெரியார் வேடத்தில் நடிக்க ஸ்ரீரங்கம் வாசுதேவ மன்றத்தில் நடந்த நாடகம். 
 
அந்த நாடகத்தில் பெரியகோவில் அர்ச்சகர் குண்டூசி ராமண்ணா என்பவரும் நடித்தார். இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆஸ்திக மக்களிடையே கண்டனத்துக்குள்ளான விஷயம். 
 
தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெரியார் என்னும் பொருளில், 'பேராசை பிடித்த பெரியார்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த நாடகத்தில் பெரியாரின் மேன்மைகளை குறித்து நான் ஒரு பாடல் எழுதி இருந்தேன்.
 
இவர்தான் பெரியார், இவரை 
எவர்தான் அறியார்?
 
என்ற பாடல் அது. அந்த நாடகத்திற்கு தலைமைத் தாங்க வந்த பெரியாரிடம் என்னை சௌந்தர்ராஜனின் தந்தை ராஜகோபால் நாயுடு அறிமுகப்படுத்தினார். நாடகத்தில் வரும் பாட்டை எழுதியவர் என்று அறிமுகப்படுத்த, 'பாட்டுன்னா இப்படித்தான் எல்லோர்க்கும் புரியும்படி எளிமையா இருக்கணும். இப்ப நாட்டுக்கு உப்யோகமில்லாத பாட்டெல்லாம் சினிமாவில் வருது' என்றெல்லாம் பெரியார் பேசியதாக என் ஞாபகம். இதுதான் பெரியாரோடு நடந்த என் முதல் சந்திப்பு. அதன் பின்பு சூரியகாந்தி பட நூறாவது நாள் விழாவில் பெரியார் கையால் கேடயம் வாங்கினேன்.
 
அன்றைக்கு நடந்த சுவையான நிகழ்ச்சி என்னவென்றால் பெரியார் முன்வரிசையில் ஜமக்காளம் விரித்து அமர, அவர் பிரியமாக வளர்த்துவரும் நாயும் அவர் அருகில் படுத்திருந்தது. நாடகம் தொடங்கி பெரியார் வேடத்தில் சௌந்தர்ராஜன் வந்ததும், பாடகர் பொன்மலை பக்கிரிசாமி என்பவர் இவர்தான் பெரியார் என்று பாடத் தொடங்கியதும், பெரியார் பக்கத்தில் படுத்திருந்த நாய் ஒரே பாய்ச்சலாக மேடைக்கு தாவி சௌந்தர்ராஜனின் வேட்டியை பற்றி இழுத்தது. சௌந்தர்ராஜன் திகைக்க, அதன்பின் பெரியார் கைத்தடியை நீட்டி நாயின் பெயர் சொல்லி அழைக்க,  அது மீண்டும் மேடையிலிருந்து தாவி முன்வரிசைக்கு வந்து பெரியாருக்கு அருகே படுத்துக் கொண்டது.
 
வாலி குறிப்பிடும் இந்த நிகழ்விலிருந்து, பெரியாரின் சமூக போராட்டத்துக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த சிலரும் ஆதரவளித்ததையும், அவர்களையும் பெரியார் ஒன்று சேர்த்து கொண்டு சென்றதையும் உணர முடியும். 
 
இந்த வரலாறு எதுவும் தெரியாத ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற நுனிப்புல் ஆசாமிகள்தான் திராவிட இயக்கத்தை பழிக்கிறார்கள். 
 
பெரியாரின் நாய் இருந்திருந்தால் இந்த போலிகளின் வேட்டியை அது உருவியிருக்கும்.
 


இதில் மேலும் படிக்கவும் :