செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (16:36 IST)

மறக்க முடியுமா - செவன் சாமுராய்

ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசவா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானது, செவன் சாமுராய். 1954 -இல் இந்தப்  படம் வெளிவந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் பொலிவு குலையாமல் இருப்பது இந்தப் படத்தின் சிறப்பு.

 
செவன் சாமுராய் படத்தின் கதை 16 -ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்  ஆரம்பத்தில், மலையடிவாரத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமத்தை திருடர்கள் கொள்ளையடிக்கப் போகிற விஷயம் அந்த கிராமத்தவர்களுக்கு தெரிய வருகிறது. கொள்ளையர்கள் வருவார்கள் என்பதை அறிந்ததுமே அந்த கிராமம் ஆடிப்போகிறது.  அவர்கள் ஏற்கனவே கொள்ளையர்களிடம் தங்களின் தானியங்களையும், அழகான மனைவி, மகள்களையும் இழந்திருக்கிறார்கள்.
 
கிராமத்தவர்கள் ஊர்ப் பெரியவரிடம் வருகிறார்கள். அவர், நகரத்துக்கு போய் சாமுராய்களை வாடகைக்கு அழைத்துவந்து  கிராமத்துக்கு காவல் போடலாம் என்கிறார். சாமுராய்களும் கிராமத்து குடியானவர்களுக்கு அந்நியமானவர்கள்தான். அவர்கள்  வீரர்கள், அதனாலேயே குடியானவர்கள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. இறுதியில் நகரத்துக்கு போய்  சாமுராய்களை அழைத்து வருவது என முடிவாகிறது.
 
நகரத்தில் சாமுராய்கள் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம், குடியானவர்களால் சாமுராய்களுக்கு பணமோ,  பொருளோ தர முடியாது. சாப்பாடு மட்டுமே போட முடியும். அதனால் பசியோடு இருக்கிற சாமுராய்களாக தேடிப்பிடிக்க வேண்டும்.
 
கடைசியில் கம்பெய்ங்கிற அனுபவம் வாய்ந்த சாமுராய் அவர்களுக்கு உதவ முன் வருகிறார். கிராமத்தை காவல் செய்ய 7  சாமுராய்கள் தேவை. ஆனால் ஆறு பேர்தான் கிடைக்கிறார்கள். கிக்குசியோ என்கிற வேடிக்கையான நபரும், அவர்களின் அனுமதியில்லாமலே அவர்களை பின் தொடர்ந்து வருகிறார். அவரும் கொள்ளையர்களுக்கு எதிராக போராடுகிறார். அவரையும்  சேர்த்துதான் ஏழு சாமுராய்கள்.
 
ஏழு சாமுராய்களும் கொள்ளையர்களுடன் மோதும் காட்சியை குரோசவா போர் போலவே படமாக்கியிருப்பார். படத்தின் ஊடாக  குடியானவர்களின் கஞ்சத்தனம் மற்றும் சுயநலம், சாமுராய்கள் வீரம் என்ற பெயரில் நடத்தும் அராஜகம் போன்றவற்றை  ஆழமாக விமர்சனம் செய்திருப்பார் குரோசவா.
 
படத்தின் இறுதியில் கொள்ளையர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள். சாமுராய்களில் நான்கு பேர் உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்.  உயிரோடு இருக்கும் மூன்று சாமுராய்களும் சோகத்தில் இருக்க, குடியானவர்கள் கிராமம் பாதுகாக்கப்பட்ட குதூகலத்துடன்  பாட்டுபாடி வயலில் நாற்று நட்டுக் கொண்டிருப்பார்கள். வயதான சாமுராய் கம்பெய், கடைசியில் வெற்றி பெற்றது குடியானவர்கள், தோற்றது சாமுராய்கள் என்று சொல்வதுடன் படம் நிறைவடையும்.
 
சாகஸம், தத்துவம், மனித உணர்வுகள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய செவன் சாமுராய் இன்றும் ஒரு கிளாஸிக்காக  உலகில் நிலைபெற்றிருக்கிறது.