வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (15:08 IST)

மனோரமா - நடிப்பின் அட்சய பாத்திரம்

நடிப்பின் அட்சய பாத்திரம், ஆச்சி மனோரமாவின் மரணம் திரையுலகை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.


 

 
நேற்றிரவு பத்து மணியளவில் மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பால் அவரது உயிர் இரவு 11.15 மணியளவில் பிரிந்தது.
 
மனோரமாவின் வாழ்க்கை எல்லா கலைஞர்களையும் போலவே வறுமையிலிருந்து தொடங்கியது. 1937 -ஆம் ஆண்டு மே 26 -ஆம் நாள் மன்னார்குடியில் மனோரமா பிறந்தபோது, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் இருந்தது. மனோரமாவின் தந்தை காசி குலோகுடையார், தாயார் ராமாமிர்தம். அவர்கள் தங்களின் பெண் குழந்தைக்கு, கோபிசாந்தா என பெயர் வைத்தனர்.
 
வறுமையின் காரணமாக மனோரமா தனது பெற்றோருடன் காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு, அவரது 12 -வது வயதில் அவரது நாடகப் பிரவேசம் நடந்தது.
 
பிரபல நாடக இயக்குனர் திருவேங்கடத்தின் நாடகத்தில் சிறுமியாக இருந்த மனோரமா நடித்தார். அவரது நடிப்பும், பாடும் திறமையும் குறுகிய காலத்திலேயே...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

 பார்வையாளர்களை ஈர்த்தது. அப்போது அவர், பள்ளத்தூர் பாப்பா என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
 
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது மணிமகுடம் நாடகத்தில் நடிக்க மனோரமாவை சென்னை அழைத்து வந்தார். திரைத்துறைக்கான வாசல் இந்த நிகழ்வுக்குப் பிறகே அவருக்கு திறந்தது. 1958 -இல் கண்ணதாசன் தயாரித்த, மாலையிட்ட மங்கை படத்தில் மனோரமா முதல்முறையாக நடித்தார்.
 
அதன் பிறகு சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர், 1963 -இல் வெளியான, கொஞ்சும் குமரி படத்தில் நாயகியாக நடித்தார். நல்லவேளையாக அவர் தொடர்ந்து நாயகியாக நடிக்கவில்லை. நடித்திருந்தால், இவ்வளவு நீண்டகாலம் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை காட்டும் வாய்ப்பு  மனோரமாவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
 
மனோரமா அனைத்துவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நகைச்சுவைதான் மனோரமாவின் அடையாளம். அதற்கு காரணமாக அமைந்த படம், தில்லானா மோகனாம்பாள். அப்படத்தில் மனோரமா ஏற்று நடித்த ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரம் சிவாஜி, பத்மினி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிளிர்ந்தது எனலாம்.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் 1200 -க்கும் மேற்பட்ட படங்களில் மனோரமா நடித்தார். அந்த அபிரிதமான எண்ணிக்கை அவரது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பொறித்தது.


 

 
ஐந்து முதல்வர்களுடன் - அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஜெயலலிதா - பணிபுரிந்தது, அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்தது, ஆயிரம் முறைக்குமேல் நாடக மேடை ஏறியது. நாடகங்களில் பாடியது போக, திரைப்படங்களில் மட்டும் 300 -க்கும் அதிகமான பாடல்கள் பாடியது என்று திறமையின் அட்சய பாத்திரமாக இருந்தார் மனோரமா. அவரது நடிப்புக்கு எதுவும் தடையாக இருந்ததில்லை.
 
திரைவாழ்க்கைக்கு எதிராக இருந்தது மனோரமாவின் குடும்ப வாழ்க்கை. நடிகர் எஸ்.எம்.ராமநாதனை மனோரமா திருமணம் செய்தார். ஆனால், கொஞ்ச காலத்திலேயே ராமநாதன் மனோரமாவைவிட்டு பிரிந்தார். மகன் பூபதியுடன் நடிப்புக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையில் மனோரமா அல்லாடினார். 
 
குடும்பக் கஷ்டங்களையும் அவர் தனது நடிப்பின் மூலமே கடந்து வந்தார். நடிப்பு அவரது நாடி நரம்புகளில் மட்டுமின்றி அவரது வாழ்க்கையாகவும் இருந்தது. அதனாலேயே, தனது தள்ளாத நிலையிலும் சிங்கம் 3, பேராண்டி படங்களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.
 
மனோரமா மீண்டு வருவார், தனது நடிப்பால் தமிழக மக்களை மகிழ்விப்பார் என்ற எதிர்பார்ப்புக்கு காலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால், அவரது புகழும், தமிழ் சினிமாவுக்கு அவர் தந்த கொடையும் என்றென்றும் நிலைத்திருக்கும்.