1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வெள்ளி, 23 ஜனவரி 2015 (08:50 IST)

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பகுதி 1

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.


 
தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. 
 
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.
 
"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன். 
 
"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம். 
 
அவர் பாடலாசிரியர்களிடம் பாடல்கள் கேட்டுப் பெறுவதும் தனித்துவமானது. அது எப்படி? அடுத்தப பகுதியில் வாலியின் வார்த்தைகளில் அதனை படிக்கலாம்.