1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Modified: சனி, 24 ஜனவரி 2015 (12:29 IST)

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பகுதி 2

பாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இனி வாலியின் அனுபவம்.
"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்."
 
ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்?
 
"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது. 
 
"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்."
 
பாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதமாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்."
 
வாலியை நடிக்க வைத்தது பாலசந்தர்தான். அந்த அனுபவம் இரு மேதைகளின் சின்ன ஈகோ மோதலாகவும் இருந்தது. எப்படி? அடுத்த பாகத்தில்.