1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Suresh
Last Updated : சனி, 24 அக்டோபர் 2015 (10:10 IST)

ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது? - இளையராஜாவின் மலரும் நினைவுகள்

இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னும் அது உருவான வரலாறு உள்ளது.


 

 
இளையராஜா என்ற இசை ஆளுமையின் திறமையை, ஞானத்தை வெளிப்படுத்தும் சரித்திரங்கள் அவை. அவ்வப்போது ஊடகங்களில் தனது பாடல்கள் உருவானது பற்றி இளையராஜா பேசியிருக்கிறார்.
 
இளையராஜாவின் முக்கியப் பாடல்களில் ஒன்றான, ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது? அதனை இளையராஜாவே பாடும்படியான சூழல் எப்படி அமைந்தது? இளையராஜாவின் வார்த்தைகளில் கேட்போம்.
 
டைரக்டர் கே.ஷங்கர் என்னிடம் 'தாய் மூகாம்பிகை' படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.

மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.
 
அடுத்த நாள் பூஜை. பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.
 
‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற காட்சி' என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, "குருவே.. நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.


 

 
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கண்ணையா அண்ணன் என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார்.
 
கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர்.
 
நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், 'ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment  தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது.
 
ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே... ஒரு சங்கீத வித்வான் பாடுவது போலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..' என்று எனக்குத் தோன்றியது.
 
நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக் கொண்டிருந்தனர்.
 
மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ' என்று எழுதினார்.
 
பாடலை முழுவதும் பாடி முடித்தால் கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.


 

 
அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம்.
 
அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
 
இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னும் இப்படியொரு கதை உள்ளது. அதனை அவர் சொல்ல யாராவது தொகுத்தால் சிறந்த இசை வரலாற்று ஆவணமாக இருக்கும்.