1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (11:52 IST)

மறக்க முடியுமா - தமிழ் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவரைப் போல் பணம், புகழில் புரண்டவர்களும் இல்லை, பசி, பிணியில் வாடியவர்களும் இல்லை.


 


பத்திரிகை என்ற பலமான ஆயுதத்தை பணம் பிடிங்கும் ஏடிஎம் எந்திரமாக கருதிய ஒரு சுயநலமியால் வீழ்த்தப்பட்ட முதல் தமிழ் நடிகரும் பாகவதர்தான். 
 
* எம்.கே.தியாகராஜ பாகவதரின் முழுப்பெயர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்பதாகும். மார்ச் 1, 1910 -ஆம் ஆண்டு மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) பிறந்தார்.
 
* பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்.
 
* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய தியாகராஜ பாகவதர் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
 
* பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை 
அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
 
* இந்துநேசன் பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாகவதர் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். 
 
* லட்சுமி காந்தன் இந்துநேசன் பத்திரிகையில் பாகவதரை நடிகைகளுடன் இணைத்து அடிக்கடி கிசுகிசு எழுதி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும், பக்ஷிராஜா பட நிறுவனருமான ஸ்ரீராமுலு நாயுடுவும் லட்சுமி காந்தனை மிரட்டினார்கள். இதற்கிடையில் லட்சுமிகாந்தன் யாரோ சிலரால் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகத்தின் பேரில் பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் ஸ்ரீராமுலுவையும் சிறையிலடைத்தார்கள். ஸ்ரீராமுலுவை உடனே விடுதலை செய்துவிட்டார்கள். பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைத் தண்டனை அனுபவித்தனர். 
 
* பாகவதர் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின.
 
* பாகவதரை ஒரு படத்தில் புக் செய்வதற்கு முன் பாபநாசம் சிவனையும் புக் செய்து கொள்வார்கள். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி அதை என்ன ராகத்தில் பாடவேண்டும் எனவும் கூறிவிடுவார்.
 
* அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் கண்ணைக் குத்தும் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர்.
 
* அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும், ஹரிதாஸ் படத்தில் கால்களை இழப்பது போலவும், நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும், அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது.
 
* பி.யு.சின்னப்பாவும், தியாகராஜ பாகவதரும் சமகாலத்தவர்கள் என்பதால் இவர்களுடைய ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும்.
 
* ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ  பாடல் பிரசித்தி பெற்றது. இந்த ஒரு பாடலைப் பார்ப்பதற்காகவே பலர் தியேட்டருக்கு வருவார்களாம். இந்தப் பாடல் முடிந்ததும் தியேட்டரை விட்டுக் கிளம்பிவிடுவார்களாம்.
 
* தங்கத் தட்டில் சாப்பிட்டு அரண்மணையில் வாழ்ந்த பாகவதர் கடைசி காலத்தில் வீட்டு வாடகை கூட கொடுக்க வழியில்லாத ஓர் அவலமான சூழலில் ஈரல் நோய் வந்து இறந்து போனார் (1959).