வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (14:59 IST)

சுந்தர் சி.யின் அருணாச்சலம் மலரும் நினைவுகள்

யுடிவி தனஞ்செயன் நடத்திவரும் பாஃப்டா கல்லூரியில் உரையாற்ற சுந்தர் சி. வந்திருந்தார்.
 
நான் ஒரு மினிமம் கியாரண்டி இயக்குனர், அப்படி இருக்கவே ப்ரியப்படுகிறேன் என்று சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலம் முதல் சொல்லி வருகிறவர். அபூர்வமாக சொன்னதை இன்றுவரை நிலைநாட்டியும் வந்திருக்கிறார்.


 

 
நகைச்சுவை படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள சிறந்த குருகுலம், சுந்தர் சி. காமெடிக் காட்சிகளை அவர் எப்படி உருவாக்குகிறார் என்பதை கவனித்தாலே ஒருவர் சிறந்த நகைச்சுவை படத்தை எடுத்துவிட முடியும். 
 
சுந்தர் சி.யின் படங்கள் பார்வைக்கு எளிதாக தெரியும். ஆனால், அதனை அவர் சாத்தியப்படுத்த எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். முக்கியமாக ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை எடுத்த அனுபவம்.
 
முப்பது வயதுக்குள் அருணாச்சலம் படத்தை ரஜினியை வைத்து எடுத்தார் சுந்தர் சி. எப்படி இதனை அவரால் சாதிக்க முடிந்தது? சுந்தர் சி.யின் மறக்க முடியாத அந்த மலரும் நினைவு சினிமாவில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் பாடமாக இருக்கும்.
 
பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை சுந்தர் சி.யிடம் ஏதோ பேச்சுவாக்கில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஒத்த கருத்து உள்ளவர்களிடம் மட்டுமே ரஜினி பணிபுரிவார். மற்றவர்களை அவர் தவிர்த்துவிடுவார் என்றிருக்கிறார். பேச்சுவாக்கில் கடந்து போகும் ஒரு விஷயம்தான் அது. ஆனால், சுந்தர் சி. அதனை மறக்கவில்லை.
 
சில வருடங்கள் கழித்து ரஜினியிடமிருந்து சுந்தர் சி.க்கு அழைப்பு வருகிறது. போகிறார். ஒரு கதை இருக்கு கேட்கிறீர்களா என்று, கோவிலில் மணியடிப்பவன் ஒருவனின் கதையை ரஜினி கூறுகிறார். கதை சரியில்லை என்று சுந்தர் சி.க்கு தெரிகிறது.
 
கதையை சொல்லி முடித்த பிறகு, கதை எப்படி என கேட்கிறார் ரஜினி..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

பஞ்சு அருணாச்சலம் சொன்னதை மட்டும் சுந்தர் சி. மறந்திருந்தால், சுமாரான கதை என்று சொல்லியிருப்பார்.
 
ரஜினியும். எஸ்.. எஸ்... என்று சொல்லி அனுப்பியிருப்பார். ஆனால், என்றோ பஞ்சு அருணாச்சலம் சொன்னது அவரது மனதில் இருந்தது. அவர் அந்த சுமார் கதையையும், சூப்பர் நல்லாயிருக்கு என்றார். ரஜினிக்கு மகிழ்ச்சி.


 

 
அந்தக் கதையைத்தான் பிறகு கதைவிவாதத்தில் மாற்றி அருணாச்சலமாக்கியிருக்கிறார்கள். ஆக, எதையும், எடுத்த உடனேயே மறுக்கக் கூடாது என்பது சுந்தர் சி. அன்று கற்றுக் கொண்ட பாடம்.
 
அதேபோல், கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் லாஜிக் பார்க்க தேவையில்லை என்பதையும் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக மாணவர்களிடம் சுந்தர் சி. கூறினார்.
 
கதைப்படி ரஜினி பணத்தை செலவு செய்வதற்காக நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்ட சூட்டில் அறை எடுத்திருக்கிறார். நாளொன்றுக்கு பல லட்சங்கள் வாடகை உள்ள சூட் அது.
 
முப்பது நாள்கள் முடியும்போது ரஜினியிடமுள்ள காசு காலியாகிவிடும். அப்போது, ஹோட்டல் மேனேஜர் வந்து ரஜினியை தட்டி எழுப்பி, முப்பது நாள் முடிந்தது என அனுப்பி வைப்பதாக காட்சி. அதாவது, முப்பது தினங்கள் ஆடம்பரமாக இருந்த ரஜினி, ஒன்றும் இல்லாதவராக ஹோட்டலில் இருந்து இறக்கிவிடப்படுகிறார் என்பதுதான் காட்சியின் மையம்.
 
முப்பது நாள்கள், பல லட்ச ரூபாய் செலவளித்து ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவரை, தூங்கிக் கொண்டிருக்கும் போது, அதுவும் ஹோட்டல் மேனேஜரே வந்து தட்டி எழுப்பி அனுப்ப மாட்டார்கள் என்று சுந்தர் சி. கூறியிருக்கிறார்.
 
ஆனால், ரஜினி அதனை மறுத்துள்ளார். தட்டி எழுப்பி அனுப்புவது போலவே எடுங்கள். யாராவது படத்தைப் பார்த்து, இது சரியில்லை, லாஜிக் இடிக்கிறது என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள், மாற்றிவிடலாம் என்றிருக்கிறார். அரைகுறை மனதுடன் ரஜினி சொன்னது போல் எடுத்தார் சுந்தர் சி.
 
இன்றைய தேதிவரை குறிப்பிட்ட அந்தக் காட்சியை யாரும் குறை சொல்லவில்லை. கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் சில நேரம் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்பதை ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்றார்.
 
திரைப்படத்தில், திரைப்படங்களைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவைப்படுகிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார் சுந்தர் சி.